TVK Vijay: மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் - மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில்விஜய்யைப் பார்ப்பதற்காக வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இன்று சந்திப்பு:
இந்த சம்பவத்திற்கு பிறகு பாதிக்க்ப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்காதது மிகப்பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் சிறப்பு பேருந்துகள் மூலமாக கரூரில் இருந்து மாமல்லபுரத்திற்கு தவெக சார்பில் அழைத்து வந்தனர்.
மன்னிப்பு கேட்டு அழுத விஜய்:
மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் உயிரிழந்தவர்களின் 41 பேர் குடும்பத்தினரையும் நடிகர் விஜய் தனித்தனியே சந்தித்தார். அவர்களது குடும்பத்தினரிடம் கரூரில் நேரில் வந்து உங்களைச் சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை நிச்சயம் கரூருக்கு மீண்டும் வந்து நேரில் சந்திப்பதாகவும் விஜய் வாக்குறுதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த குடும்பங்களிடம் விஜய் கண்ணீர் விட்டு அழுததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக வரலாற்றில் கருப்பு நாள்:
தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு தனது அரசியல் பயணத்தை விறுப்பாக்கிய தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். திருச்சியில் தொடங்கிய அவரது பரப்புரை அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல்லில் சிறப்பாக நடக்க கரூர் தவெக-விற்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.
தவெக அரசியல் வரலாற்றில் சோகத்திற்குரிய நாளாக மாறிய அந்த பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த பிறகு, தவெக மற்றும் விஜய்யின் செயல்பாடுகள் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினாலும் விஜய் நேரில் வரவில்லை என்ற விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டது.
உத்தரவாதம் அளித்த விஜய்:
இந்த சூழலில், விஜய் பாதிக்கப்பட்ட மக்களை தன்னைப் பார்க்க அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்க்காமல், தன்னைப் பார்க்க அழைத்து வரலாமா? என்று அனைத்து தரப்பினரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில், தனது தரப்பு நியாயத்தை ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியே நேரில் சந்தித்து விஜய் விளக்கம் அளித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் விஜய் உத்தரவாதம் அளித்துள்ளார்.
விஜய் தற்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டதால் மீண்டும் அவர் தனது பரப்புரையை விரைவில் தொடங்குவார் என்று கருதப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருப்பதால் விஜய் இனி வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் தனது அரசியல் பணிகளைத் தொடங்குவார் என்று கருதப்படுகிறது.





















