TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக-வின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், ராமதாசை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களுக்குள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தேர்தல் தேதி இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், இதுவரை எந்த கட்சியும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவில்லை. தேமுதிக, ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் யாருடன் கூட்டணி? என்பதும் இதுவரை உறுதியாகவில்லை.
ராமதாஸ்:
மகன் அன்புமணியுடன் மோதல் போக்கில் இருக்கும் ராமதாஸ், தொடக்கம் முதலே திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வந்தார். ஆனால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவே இருந்த அன்புமணி, கடந்த மாதம் அந்த கூட்டணியில் இணைந்தார். அன்புமணிக்கு சாதகமாகவே பல விஷயங்கள் இருப்பதால் பாமக-வின் மாம்பழ சின்னமும் அவருக்கே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைய தொடர்ந்து ஆர்வம் காட்டினாலும், விசிக தலைவர் திருமாவளவன் ராமதாஸ் உள்ளே வந்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என்று அச்சுறுத்தி வருகிறார். மாம்பழ சின்னம் இல்லாமல் ராமதாஸ் உள்ளே வந்தாலும் அவரது ஆதரவாளர்களுக்கு, அவர் கேட்கும் அளவிற்கு திமுக-வால் ஒதுக்க இயலாது என்பதே கள யதார்த்தம். ஏனென்றால், திமுக கூட்டணியில் ஏற்கனவே ஏராளமான கட்சிகள் உள்ளனர்.
விஜய்க்காக சந்திக்கும் செங்கோட்டையன்:
இந்த சூழலில், ராமதாஸை தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை கரம்கோர்க்க எந்த அரசியல் கட்சியினரும் முன்வராத நிலையில், செங்கோட்டையன் தவெக - ஓ.பன்னீர்செல்வத்தை உள்ளே கொண்டு வர முயற்சி செய்தார்.
ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியில் தினகரன் இணைந்துவிட்டார். ஓ.பன்னீர்செல்வமும் அந்த கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், அதிமுக கூட்டணிக்குச் செல்ல விருப்பம் இல்லாத நிலையிலும், திமுக கூட்டணியில் சேர முடியாத நிலையிலும் உள்ள ராமதாசை செங்கோட்டையன் நேரில் சந்தித்து தங்களது பக்கம் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
தவெக-வை வலுப்படுத்துவாரா ஐயா?
கட்சியும், சின்னமும் தற்போது அன்புமணி பக்கம் இருந்தாலும், ராமதாஸிற்கு என்று அவரது சமுதாய மக்கள் மத்தியில் பெரும்பாலான ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலில் அனுபவம் மிக்க ராமதாஸ் தங்கள் கூட்டணியில் இணைந்தால், வட தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தவெக கருதுகிறது.
விஜய்க்காக செங்கோட்டையன் ராமதாசை சந்தித்தால், ராமதாஸ் விஜய்யின் கரத்தை வலுப்படுத்துவாரா? அல்லது அதிமுக - பாஜக கூட்டணிக்கேச் சென்றுவிடுவாரா? அல்லது தேர்தலில் தனது ஆதரவாளர்களை களமிறக்காமல் ஒதுங்கிவிடுவாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் என இதுவரை யாருடனும் இணையாத நபர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வர தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பல்வேற அதிரடி திருப்பங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.























