தமிழக அரசியல் களம் தற்போது முதலே 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கினர். பிப்ரவரி மாதம் கட்சியைத் தொடங்கிய விஜய் அக்டோபரில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் தன்னனுடைய கொள்கைளையும், கோட்பாடுகளையும், செயல் திட்டங்களையும் அறிவித்தார்.
திமுக, பாஜக தன்னுடைய அரசியல் எதிரிகள் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ள விஜய் அந்த இரு கட்சியினர் தவிர மற்ற கட்சியினர் யாரையும் விமர்ச்சிக்காமல் சட்டசபை தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வருகிறார். மேலும் கட்சியை கட்டமைக்கும் நோக்கில் நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர்கள் சேர்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார், தலைமை நிர்வாகிகளையும் அதற்கான பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.
வலுக்கும் உட்கட்சி மோதல்:
இந்த கீழ்மட்ட அளவில் தவெக-வில் உள்கட்சி மோதல் வலுப்பெற்று உள்ளது. நீண்ட காலமாக விஜயின் தீவிர ரசிகர்களாக இருந்தவர்கள் விஜய் கட்சியைத் தொடங்கியவுடன் இணைந்தனர். இந்த சூழலில் சிலர் விஜய் கட்சியை தொடங்கிய பிறகு தங்கள் தனிப்பட்ட செல்வாக்கை வைத்து கட்சியில் இணைந்துள்ளனர். தொடக்கம் முதலே விஜயின் ரசிகர்களாக இருந்தவர்களை காட்டிலும், கட்சி தொடங்கிய பிறகு தவெக-வில் இணைந்தவர்களுக்கு சில இடங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், கட்சி தொடங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் பல மாவட்டங்களில் உட்கட்சி மோதல் தலை தூக்கியுள்ளது. திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாளில் தவெக-வினர் தனித்தனி அணியாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது உட்கட்சி மோதலை அப்பட்டமாக வெளிக்காட்டியது. வத்தலகுண்டுவில் பதவி பறிக்கப்பட்டதால் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி மேற்கொண்டது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முழுமை அடையாத நிர்வாகிகள் நியமனம்:
திண்டுக்கல் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டத்திலும் தவெக-வில் இதே நிலை நீடிக்கிறது. மாவட்ட தலைவரை நீக்கியாக மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட அமைப்பாளரை நீக்கியாக மாவட்ட தலைவரும் மாறி மாறி அறிவித்து தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ராமநாதபுரம், திண்டுக்கல் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் தவெக-வில் உட்கட்சி மோதல் பனிப்போராக நீடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் கீழ்மட்ட நிர்வாகிகளை, பூத் கமிட்டி நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் நியமிக்கவில்லை.
ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், விஜய் தளபதி 69 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு முதல் தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ள விஜய், உள்கட்சி மோதலை விரைந்து முடிவுக்கு கொண்டு வராவிட்டால் அதன் விளைவுகளை தேர்தலில் சந்திக்க நேரிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உட்கட்சி மோதல் விவகாரத்தை விஜய் கவனித்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கட்சியின் தலைமை நிர்வாகிகளும் இந்த விவகாரத்தில் மந்தமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால், விஜய்யின் தீவிர ரசிகர்கள் விஜய் விரைந்து உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், 2025 முதல் தீவிர அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். விஜய் இந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.