தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் முதல் தீர்மானத்தை கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் வாசித்தார். முதல் தீர்மானமாக கரூர் துயர சம்பவத்தில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Continues below advertisement

கட்சித் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்

தொடர்ந்து கோவை பகுதியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்பறையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, கடைசி தீர்மானமாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த முடிவு எடுப்பது குறித்து முழு அதிகாரத்தை, பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய்க்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   

கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்

முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தவர்களை புஸ்ஸி ஆனந்த வரவேற்று பேசினார்: இது பொதுக்குழு கூட்டம் அல்ல இது லட்சிய பயணத்தின் வரலாற்று திருப்பும். விஜயை மையமாக வைத்து தான் இன்றைய அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாபெரும் இயக்கத்திற்கு கட்டுப்பாடு என்பது அவசியம். தலைவரின் முடிவுக்கு கட்டுப்பட்ட தாய் பிள்ளைகளாக செயல்பட வேண்டும். நமது பலமே நம்முடைய கட்டுக்கோப்புதான். அதை சீர்குலைக்க நினைக்கும் எதிரிகளை அனுமதிக்க கூடாது.‌

Continues below advertisement

பெரியவர்களை மதித்தும் இளைஞர்களை அரவணைத்தும் நாம் பயணிக்க போகிறோம். இனி ஒரு நொடி கூட ஓய்வில்லை, ஒவ்வொருவரும் கிராமம் மற்றும் நகரங்களுக்கு செல்ல வேண்டும். நமது கட்சியுடைய எதிர்கால திட்டங்களை விளக்க வேண்டும். நமது தலைவரை 2026-இல் முதலமைச்சராக, அமர்வதற்கு நாம் எல்லோரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அந்த மாற்றத்தை கொண்டு வரும் மாபெரும் சக்தியாக நாம் இருக்கிறோம். அதனுடைய தொடக்கம் தான் இன்றைய சிறப்பு பொதுக்குழு கூட்டம். வரலாறு நம்மை வரவேற்கிறது என பேசினார்.

2000 பேர் பங்கேற்பு

தமிழக வெற்றி கழக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.