செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசாமி, தன் மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகாருக்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளர்கள் மத்தியில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு பொய்யான வீடியோவை பரப்பி, தன் மீதும் தன் கழகத்தின் மீதும் அவதூறு ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Continues below advertisement

வைரல் வீடியோவின் பின்னணி: லஞ்சமா? கடனா?

நேற்று இணையதளத்தில் தான் லஞ்சம் பெற்றதாக வெளியான வீடியோ குறித்து விளக்கம் அளித்த ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, தான் யாரிடமும் லஞ்சம் பெறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது நண்பரான நவீன் என்பவர், சொந்த ஊரில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறி தன்னிடம் கைமாற்றாக அவசரத்திற்குப் பணம் வாங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார். அவ்வாறு வாங்கிய கடனை அவர் இரு தவணைகளாகத் திருப்பிக் கொடுத்துள்ளார். 

அதில் ஒரு லட்சம் ரூபாயை ஜிபே (GPay) மூலமாகவும், மீதமுள்ள 30,000 ரூபாயை தனது டிஜிட்டல் பிரிண்டிங் அலுவலகத்திற்கு நேரில் வந்தும் கொடுத்துள்ளார். அந்த அலுவலகத்தில் வைத்து 30,000 ரூபாயைத் தரும்போது, அதை மறைமுகமாக வீடியோ எடுத்து லஞ்சம் வாங்குவது போல இணையத்தில் தவறாகத் திணித்துப் பகிர்ந்துள்ளனர் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Continues below advertisement

திமுகவின் சதித் திட்டம் என பகிரங்கக் குற்றச்சாட்டு

இந்த அவதூறு பரப்புரைக்கு முழு காரணம் அரசியல் சதிதான் என்று குற்றம் சாட்டிய வீராசாமி, இதற்குப் பின்னால் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவருமான இதயவர்மன் மற்றும் மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார் ஆகிய இருவர் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் தூண்டுதலின் பேரிலேயே நவீன் என்பவர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று சாடியுள்ளார். மேலும், நவீன் என்பவர் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளிலும் சப்-காண்ட்ராக்ட் (Sub-Contract) எடுத்து வேலை செய்து வருவதாகவும், அவர் திமுக ஒன்றிய பெருந்தலைவரின் ஆசியோடுதான் இந்த சதியில் இறங்கியுள்ளார் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

நிர்வாக ரீதியான விளக்கம் மற்றும் கேள்விகள்

ஊராட்சி மன்ற நடைமுறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "பில் பாஸ் (Bill Pass) செய்ய வேண்டிய அதிகாரம் என்னிடம் இல்லை. அதற்கான முழு அதிகாரம் பிடிஓ (BDO) எனப்படும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்தான் உள்ளது. எனக்கு செக் பவர் (Check Power) கையெழுத்திடும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நவீனுக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில், வேண்டுமானால் நான் பிடிஓ-விடம் பேசி உன்னுடைய பில் கணக்கை சீக்கிரமாக முடிக்கச் சொல்கிறேன் என்றுதான் கூறினேன்" என்றார்.

மேலும் தன் மீதான புகாரை மறுக்கும் வகையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அவர்: "நான் லஞ்சம் வாங்குவதாக இருந்தால் அதை வெளியில் வாங்கியிருப்பேன் அல்லது வேறு யார் மூலமாவது வாங்கச் சொல்லியிருப்பேன். அதை விடுத்து எனது சொந்த அலுவலகத்திற்கு வரவழைத்து, அதை வாங்கி என் மனைவியிடம் ஏன் கொடுக்கப் போகிறேன்? லஞ்சம் வாங்குபவர் யாராவது ஜிபே (GPay) மூலமாகப் பணம் வாங்குவார்களா? இது லஞ்சமாக இருந்தால் அவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்து என்னை முறையாகக் கைது செய்திருக்க வேண்டுமே தவிர, இப்படி வீடியோ எடுத்திருக்க மாட்டார்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

பழிவாங்கும் அரசியல்: பின்னணி என்ன?

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முதல் ஊராட்சி மன்ற தலைவர் தான்தான் என்பதைச் சுட்டிக்காட்டிய வீராசாமி, இதனை திமுகவினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றார். இதன் காரணமாகவே தம்மைக் பழிவாங்கும் நோக்கில், கடந்த காலத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தூண்டிவிட்டு என் மீது பொய்யான புகார்களைக் கொடுத்து, தலைவர் பதவியில் இருந்தே நீக்கினர்.

அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் ஒரு மாத காலமாக ஊராட்சி மன்ற தலைவராகப் பணியாற்றி வருகிறேன். நான் மீண்டும் பதவிக்கு வந்தது பிடிக்காமலும், தமிழக வெற்றி கழகத்தின் பெயருக்கும், எனது பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட சதியோடும் இந்த பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளனர் என்று வீராசாமி தனது பேட்டியில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.