தமிழக அரசியல் களம் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் என்றாலே தமிழ்நாட்டில் பரபரப்பாகவே இருக்கும். அதுவும் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மிகவும் பரபரப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்:
அதற்கு காரணம் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வரும் விஜய்யின் அரசியல் வருகையே ஆகும். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் வரவேற்ற சிலர், அவரது கொள்கைகள் மற்று்ம் கோட்பாடுகளை கூறிய பிறகு எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். விஜய் தன்னுடைய அரசியல் எதிரி தி.மு.க. என்றும், கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும் கூறியுள்ளனர்.
விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டிற்கு பிறகு நடிகர் விஜய்யை அடிக்கடி தமிழக அரசியல் களத்தில் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து இருந்த அவரது கட்சி நிர்வாகிகளுக்கும், மக்களுக்கும் தற்போது வரை ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அவரது அரசியல் வருகைக்கு பிறகு தமிழ்நாட்டில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் சிலவற்றிற்கு மட்டுமே விஜய் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி:
எந்தவொரு தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் என்றாலும், தனது வீட்டில் வைத்தே மரியாதை செலுத்தி வருகிறார். ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமே தத்தளித்தது. அந்த மோசமான சூழலில், மக்களோடு மக்களாக பலரும் களத்தில் இறங்கி பணியாற்றினர். நடிகர் விஜய்யும் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மக்களை நேரில் சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிவாரணம் பெற்ற மக்களிடம் தான் நேரில் வந்தாலும் தேவையில்லாத கூட்டம் கூடிவிடும் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், அரசியல் களம் என்று வந்துவிட்ட பிறகு மக்களைச் சந்திக்காமலே வாக்குகளைப் பெற முடியும் என்று கருதினால் அது பெரும் தோல்விக்கு வழிவகுக்கும். விஜய்யின் இதுபோன்ற செயல்களால் அவரை பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பதிலடி தருவாரா விஜய்?
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் விஜய் இதேபோன்று மக்களைச் சந்திக்காமலே இருந்தாலோ, களத்திற்கு வராமல் அரசியல் செய்தாலோ நிச்சயம் பெரும் பின்னடைவை அவர் சந்திக்க நேரிடும். தி.மு.க. தலைமையிலான பலமிகுந்த கூட்டணியை உடைக்க விஜய் முயற்சி செய்து வரும் சூழலில், அதற்கான களப்பணி என்பது மிகவும் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்றே அரசிய்ல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற தன் மீதான விமர்சனத்திற்கு விஜய் எப்படி பதிலடி அளிக்கப் போகிறார்கள்? பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற முத்திரைகளை எப்படி அழிக்கப் போகிறார்? என்பது அடுத்தாண்டு அவர் எடுக்கப்போகும் அரசியல் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்.