முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜயின் புகைப்படத்தைக் காட்டிய மாணவனை, போலீஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில், கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் இரண்டு நாள் நிகழ்ச்சி இன்று (ஜூன் 27) தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், சாகித்ய அகாடமி செயலாளர் ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜயின் புகைப்படம் பொறிக்கப்பட்ட கர்ச்சீப்பை மாணவர் ஒருவர் எடுத்துக் காட்டினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. அவர் புகைப்படம் அடங்கிய கர்ச்சீப்பைக் காட்டியதும், அவரைச் சுற்றி இருக்கும் மாணவர்கள் கைதட்டி, சிரித்தவாறே பேசிக் கொண்டிருக்கின்றனர். 

யார் இந்த மாணவர்?

விஜய்யின் புகைப்படம் பொறிக்கப்பட்ட கர்ச்சீப் காட்டியவர் குணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர் எனத் தெரிய வந்துள்ளது. இவர் சென்னை புதுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தமிழ் துறையில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவரை தற்போது விசாரணைக்காக திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்து சென்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் ரோடு ஷோவிலும்..

முன்னதாக, வேலூரில் நடைபெற்ற ரோடு ஷோவில் முதல்வர் ஸ்டாலின் அண்மையில் பங்கேற்றார். அப்போது அங்கு மக்கள் திரளாகக் கூடி இருந்தனர். அதற்கு நடுவில் மாணவர்களும் தவெக ரசிகர்களுக்கான சில இளைஞர்கள், ’’விஜய்.. விஜய்.., டிவிகே, டிவிகே..!’’ என்று கூக்குரலிட்டனர். இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.