சென்னையில் நேற்று நடந்த பிரம்மாண்ட விமானப்படை சாகச கண்காட்சியை பார்க்க ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடுகளை செய்யாததே காரணம் என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.


உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள் – அமைச்சர் மா.சு.


இந்த விவகாரத்தில் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள். இது அரசியல் செய்ய வேண்டிய விஷயம் அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், விஜயின் அறிக்கை தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. அதில், அரசுக்கு கண்டனமோ, எதிர்ப்போ எதுவும் இன்றி, இனி வரும் காலங்களில் இதுபோன்று நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை விஜய் வலியுறுத்தி உள்ளார்.


கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் – கோரிக்கை வைத்த விஜய்


மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் திமுக அரசையும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை கொடுத்து வரும் நிலையில், விஜயின் அறிக்கை அதற்கு நேர்மாறான ஒன்றாக இருக்கிறது. உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் இதுபோன்ற ஒரு பதிவை விஜய் பதிவிட்டிருப்பதாக தெரிகிறது.






இதுதான் விஜய் பாணியா..?


இதுபோன்ற துயர சம்பவங்கள் எதிர்பாராதவிதமாக நடைபெற்றாலும் அரசியல் களத்தில் அது பேசுபொருளாகும். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து பேட்டி கொடுப்பதும் அறிக்கை விடுப்பதுமே இதுவரையிலான வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் கருத்துகள் எதையும் விஜய் பதிவிடாமல், இதனை சரி செய்ய வேண்டும் என்று அரசுக்கு அவர் கோரிக்கையாகவே வைத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதன் மூலம், இதுபோன்ற பாணியையே அவர் தன்னுடைய வருங்கால அரசியல் நடைமுறையாக, பாணியாக வைத்துக்கொள்வாரே என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.