நெருங்கும் தேர்தல்- கூட்டணியை இறுதி செய்யும் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தல் நேருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அதிமுக இறுதி செய்துள்ளது. அந்த வகையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும், என்ற திட்டத்தோடு பாஜகவோடு கூட்டணியை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக பாமகவையும் தங்கள் அணியில் இணைத்தார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனியாக அமமுக கட்சியை நடத்தி வரும் டிடிவி தினகரனோடு வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை உறுதி செய்துள்ளது அதிமுக- பாஜக.
இதனை டிடிவி தினகரனும் செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாத்திரமல்ல தமிழ்நாட்டிற்கு நல்லதொரு ஆட்சிக்கான தொடக்கத்தை நோக்கி அதில் பங்கு பெறுவதற்காக மக்கள் விரும்புகின்ற நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக புறப்பட்டு செல்கிறோம்.
எங்களுக்குள் பங்காளி சண்டை தான்
விட்டுக் கொடுத்துப் போபவர்கள் என்றைக்கும் கெட்டுப் போனதில்லை என்னதான் இருந்தாலும் எங்களுக்குள் பங்காளி சண்டை தான் "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்" என பொதுக் குழுவில் சொல்லிவிட்டேன் நான் பழசையே நினைத்து விட்டு கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக்கூடாது என்பதற்காக பொதுநோக்கத்தோடு நாங்கள் விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் ஆட்சி கொண்டு வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து சட்டமன்ற தேர்தல் கூட்டணியை டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். அப்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் டிடிவி தினகரனை வரவேற்று அழைத்து சென்றனர். இந்த சந்திப்பின் போது பாஜக நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். அதிமுக நிர்வாக்கிகள் யாரும் பங்கேற்கவில்லை. எனவே அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு ஒதுக்கப்படும் உள் ஒதுக்கீடு மூலம் டிடிவி தினகரனுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியோடு டிடிவி தினகரனும் ஒரே மேடை ஏறவுள்ளனர். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே மேடையில் சந்திக்கவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.