Trump Tariff Modi: இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தாலும், பாகிஸ்தான் உடனான மோதலை நிறுத்தியது நானே என ட்ரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

Continues below advertisement

மீண்டும் உரிமை கோரும் அமெரிக்கா:

பாகிஸ்தான் உடனான இந்தியாவின் ராணுவ மோதலை நேரடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்கா மீண்டும் உரிமை கோரியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனியார் நிகழ்ச்சியில் பேசுகையில், “அமைதியை காக்க வேண்டும் என உறுதிபூண்டுள்ள அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து அமைதிக்கான அதிபராகவும் செயல்பட்டு வருகிறார். அதன்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலுக்கு சென்றபோது, நாங்கள் நேரடியாக அந்த விவகாரத்தில் தலையிட்டோம். அதிபர் ட்ரம்ப் தான் அந்த விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டினார். இதேபோன்று பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இதில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடித்து வைப்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்” என  மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். 

மறுக்கும் இந்தியா:

கடந்த 10ம் தேதி முதலே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது நானே என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து உரிமை கோரி வருகிறார். ஆனால், வர்த்தக ஒப்பந்தங்களை முன்வைத்தே அங்கே அமைதியை கொண்டு வந்ததாகவும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலமாகவே அமைதி எட்டப்பட்டதாகவும், அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை என்றும் மத்திய அரசு விளக்கமளித்து வருகிறது. பாகிஸ்தானின் நேரடி கோரிக்கையை ஏற்றே தாக்குதலை கைவிட்டதாக, நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Continues below advertisement

கடுப்பான அதிபர் ட்ரம்ப்?

மோதலை நிறுத்தியது நானே என ட்ரம்ப் மீண்டும் மீண்டும் உரிமை கோரி வந்தாலும், மத்திய அரசு அதனை மறுத்து வருகிறது. இதன் காரணமாகவே ஆத்திரமடைந்து இந்தியா மீது அமெரிக்கா அதிகப்படியான வரி விதித்துள்ளதாக, அமெரிக்காவை தளமாகக் கொண்ட வில்சன் மையத்தில் உள்ள தெற்காசிய நிறுவனத்தின் இயக்குனரும், ஆய்வாளருமான மைக்கேல் குகல்மேன் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் உயர்ந்த தலைவர், அமைதியை நிலைநாட்டக்கூடிய தலைவர் என தன்னை முன்னிலைப்படுத்த ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கு பாகிஸ்தான் ஒத்துழைத்துள்ளது. ஆனால், இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது ட்ரம்பை கோபமடைய செய்து, இந்தியா மீது கூடுதல் வரியை விதிக்கச் செய்துள்ளது” என தெரிவித்துள்ளார். அதனை கருத்தில் கொண்டு ஆய்வுய் செய்தால், பாகிஸ்தான் மீது அமெரிக்கா வெறும் 19 சதவிகித வரி மட்டுமே விதித்துள்ளது குறிப்பிடத்தகக்து.

அரசியல் லாபங்கள்:

பல சர்ச்சைகள் மற்றும் வழக்குகளுக்கு மத்தியில் அதிபரான ட்ரம்ப், தன்னை வலுவான தலைவராக முன்னிலைப்படுத்த அதிக ஆர்வம் காட்டுகிறார். அதற்கு உறுதுணையாக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அவரே வலியுறுத்தி வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்திய பெருமை கிடைத்தால், தனக்கான அடையாளம் வலுவாகும் என நினைக்கிறாராம். ஆனால், அதனை ஏற்றால் மோடியின் வலுவான தலைவர் என்ற பிம்பம் சிதையும் என பாஜக கருதுகிறதாம். எனவே ட்ரம்பின் பேச்சை ஏற்க மத்திய அரசுமறுக்கிறது. மறுபுறம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் அசைவ பாலை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க விரும்புகிறது. அப்படி செய்தால் விவசாயிகள் மற்றும் மத உணர்வாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படக்கூடும் என்பதால் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்வரவில்லையாம். இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளின் தொகுப்பாகவே அதிபட் ட்ரம்ப் ஆத்திரமடைந்து,  இந்தியா மீது வரிப்போரை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி உடனான நட்பை எல்லாம் மறந்து, இந்த தீவிரமான நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.