திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ ப்ரெயின் கடந்த டிசம்பர் 21 அன்று மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் நாடாளுமன்றத்தின் தற்போதைய குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் கலந்துகொள்ள முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. 


கடந்த டிசம்பர் 21 அன்று, மாநிலங்களவையில் மோசமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் விதிகள் சட்டதிருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, கடும் கோபத்தில் டெரிக் ஓ ப்ரெயின் மாநிலங்களவை விதிமுறைகள் புத்தகத்தைத் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. 



டெரிக் ஓ ப்ரெயின்


 


`கடந்த முறை மத்திய அரசு விவசாயச் சட்டங்களை மக்கள் நோக்கி தள்ளிக்கொண்டிருந்தபோது நான் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். அதன்பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இன்று பாஜகவினர் நாடாளுமன்றத்தைக் கேலிக் கூத்தாக மாற்றிக் கொண்டே, தேர்தல் சட்ட மசோதாவை மக்களை நோக்கித் தள்ளியதை எதிர்த்துப் போராடியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். இந்தச் சட்டதிருத்தமும் விரைவில் பின்வாங்கப்படும் என நம்புகிறேன்’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டெரிக் ஓ ப்ரெயின். 






இதே வேளையில், தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா மூலமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக ஒவ்வொருவரும் முன்வந்து இணைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சட்டதிருத்த மசோதா கடந்த டிசம்பர் 21 அன்று மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தப்பட்டுள்ளது. 



டெரிக் ஓ ப்ரெயின்


 


மக்களவையையும், மாநிலங்களவையையும் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் காந்தி சிலை முதல் விஜய் சௌக் பகுதி வரையில் பேரணியாகச் சென்றனர். லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்குக் காரணமான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மோசமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. டெரிக் ஓ ப்ரெயினின் இடைநீக்கத்திற்குப் பிறகு, இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.