திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் விஷயத்தில் பாயிண்டை பிடித்த சௌமியா..

"திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த கொள்கை கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி கடிதம்"

Continues below advertisement

தமிழ்நாட்டில் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோருக்கான சமூகநீதி உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்வதற்கான கொள்கைகளை வகுக்கும் போது அவற்றை ஒருங்கிணைந்து வகுக்காமல் தனித்தனியாக வகுக்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

நீதி வழங்க வேண்டும்

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முனைவர் சவுமியா அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருவாறு:

மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு கடவுளின் குழந்தைகள் என்று கொண்டாடப்படுகிறார்களோ, அதே போல் தான், பிறப்பிலேயே இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரும் அரசாலும், சமூகத்தாலும் அரவணைக்கப்பட்டிருக்க வேண்டும்; கொண்டாடப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்காதது மட்டுமின்றி, அவர்கள் தீண்டத்தகாதவர்களையும் விட மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்; பொதுவெளியில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த அநீதிக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பரப்புரைகளின் காரணமாக அவர்களும் நம்மில் ஒருவர் தான் என்ற எண்ணம் இப்போது உருவாகத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும், சக மனிதர்களுக்கு உரிய அனைத்து மரியாதைகள் மற்றும் உரிமைகளுடன் வாழ இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும்.

திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு உரிமை வழங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மத்திய அரசால், 2019&ஆம் ஆண்டு திருநங்கையர்கள், திருநம்பியர்மற்றும் இடைபாலினத்தவர் ( உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான விதிகள் 2020&ஆம் ஆண்டு வகுக்கப்பட்டன.

தனிக்கொள்கை வகுக்க தமிழக அரசு

திருநங்கையர்களைக் போலவே தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் தனிக்கொள்கை வகுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தங்களுக்கு தனிக் கொள்கை தேவையில்லை என்றும், இரு தரப்பினருக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் அவர்கள், கடந்த 3&ஆம் தேதி இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் தனித்தனியாக கொள்கைகள் வகுப்பதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்; அதனால் இருவருக்கும் ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்த அரசின் நிலைப்பாட்டை வரும் 17 ஆம் தேதி விளக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கப்பட்டால், திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

ஒரு விழுக்காடு கிடைமட்ட இட ஒதுக்கீடு

திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கான கொள்கையில் மிக முக்கியமான ஒன்று அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான அனைத்து வகுப்பு இட ஒதுக்கீட்டிலும் ஒரு விழுக்காடு கிடைமட்ட இட ஒதுக்கீடு (Horizontal Reservation) வழங்குவது தான். சென்னை உயர்நீதிமன்றமும் இதை பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கிறது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் பெருவதில் திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவரையும், தன்பாலின ஈர்ப்பாளர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. இரு பிரிவினரின் சமூக, கல்வி நிலைகளும் முற்றிலும் நேர் எதிரானவை என்பதால் இருவருக்கும் ஒரே கொள்கை வகுப்பது சமூக நீதி ஆகாது.

திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர் சமூகப் புறக்கணிப்புகளையும், அவமதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் பிறப்பின் அடிப்படையில் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் அடையாளங்களைக் கொண்டு அவமதிக்கப்படுகின்றனர்.

ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறானது

இந்த சிக்கல்கள் எதுவும் தன்பாலினச் சேர்க்கையாளர்களுக்கு கிடையாது. அவர்கள் பிறப்பின் அடிப்படையில் புறக்கணிக்கப்படுவது கிடையாது. அவர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்படுவதில்லை. தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருப்பவர்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ முடியும்.

தன்பாலின ஈர்ப்பாளர் என்பது அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட நிலை ஆகும். எனவே, இரு தரப்பினரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறானது ஆகும். தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை வரும் 17&ஆம் தேதி இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் போது உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Continues below advertisement