TN Finance: உதவித்தொகை திட்டங்களால் கடனாளியாகும் தமிழ்நாடு? தினமும் ரூ.184 கோடி வட்டி - ஷாக் நிதிநிலை
TN Finance: தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள கடனுக்கு தினசரி 184 கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே செலுத்தி வருவதாக வெள்ளையறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

TN Finance: தமிழ்நாடு அரசின் பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் குறுகிய காலத்திற்கு உதவினாலும், மக்கள் மீது நீண்டகால சுமையாக மாறுவதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தினசரி ரூ.184 கோடி வட்டி
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த 5 ஆண்டுகளில் மாநில நிதிநிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டது. அதன்படி, அரசு மட்டுமின்றி பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள தொகையையும் சேர்த்தால் மாநிலம் மொத்தமாக 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதற்காக ஒராண்டிற்கு 67 ஆயிரத்து 50 கோடி ரூபாய் வட்டியாக மட்டுமே கட்டப்படுகிறதாம். அதாவது ஒரு மாதத்திற்கு சராசரியாக 5 ஆயிரத்து 587 கோடி ரூபாயும், ஒரு நாளைக்கு சுமார் 184 கோடி ரூபாயும், ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.7.7 கோடி ரூபாயும் வட்டியாக மட்டுமே செலுத்தப்படுகிறதாம். இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் மாநில அரசுக்கான சொத்துக்களை உருவாக்குவதற்காக கடந்த நிதியாண்டில் 50 ஆயிரத்து 911 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், கடனுக்கான வட்டியாக மட்டுமே 67 ஆயிரத்து 50 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
அரசுக்கு போதாத வருவாய்..
தமிழ்நாடு அரசின் ஆண்டு வருவாய் 100 ரூபாய் என்றால் 145 ரூபாய் செலவாகிறது. பற்றாக்குறையாக உள்ள 45 ரூபாய் கடனாக வாங்கப்படுகிறது. உதாரணத்திற்கு அரசின் வருவாய் 100 ரூபாய் என எடுத்துக்கொண்டால் வட்டி, ஊதியம் மற்றும் ஓய்வூதியம் போன்ற கட்டாய செலவுகளுக்காக மட்டுமே 64.40 ரூபாய் செலவாகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய மானியங்கள், ஓய்வுதியங்களுக்காக மாநில அரசின் இணை பங்களிப்பிற்காக சுமார் 23 ரூபாய் செலவாகிறது. எனவே மேற்குறிப்பிடப்பட்ட குறிப்பிட்ட செலவுகளுக்காகவே 87 ரூபாய் செலவாக, மீதமுள்ள 13 ரூபாயை வைத்து மாநில அரசின் வழக்கமான திட்டங்களை கூட செயல்படுத்த முடியாததால் கடன் வாங்க வேண்டிய கட்டாயமான சூழல் ஏற்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டியுடன் வசூலிக்கும் அரசு..!
தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள நலத்திட்டங்களுக்காக மட்டுமே, மாநில அரசின் மொத்த வருவாயில் 40 சதவிகிதம் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை, மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, இலவச பேருந்து பயணம் என எண்ணற்ற இலவச திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான போதி நிதி வருவாய் இல்லாததால், பெரும்பாலும் கடன் வாங்கியே செயல்படுத்தப்படுகின்றன என்பது வெள்ளை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. எனில் மாதம் 1000 ரூபாய் என்ற குறுகிய கால பலனை மட்டுமே கண்களுக்கு காட்டி, அதற்கான வருவாய் பற்றாக்குறை என்ற பெயரில் மின்சார கட்டணம், பேருந்து கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி போன்றவற்றை அவ்வப்போது அரசு உயர்த்துகிறது. அதாவது வெறும் ஆயிரம் ரூபாய் கொடுத்து, அதனை வட்டியுடன் சேர்த்து பல்வேறு வரிகள் மூலம் அரசு நம்மிடம் வசூலித்து வருகிறது.
ஆட்சியாளர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள்
மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில் வளர்ச்சியை விரிவாக்கம் செய்து போதுமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலே இலவசங்கள் என்பது அநாவசியமாகிவிடும். ஆனால், லஞ்சம் மற்றும் ஊழல் போன்ற செயல்களால் மாநில வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். அவற்றை நிறைவேற்றுவதற்காக ஆட்சிக்கு வந்ததும் தாராளமாக கடனை வாங்கி குவித்து, அவற்றிற்கான வட்டிகளை கட்ட வரிகளை ஏகபோகமாக உயர்த்திவிடுகின்றனர். அதேநேரம், கவர்ச்சி திட்டங்களுக்கான செலவை உரிய மூலதன செலவாக மாற்றினால், தொழில்துறை வளர்ச்சி கண்டு தனிநபர் வருமானம் அதிகரிப்பதோடு மநிலத்தின் பொருளாதார நிலையும் மேம்படும். கடன் சுமையையும் குறைக்க முடியும் அல்லவா? நலத்திட்டங்கள் சமூகத்தில் பின் தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு அவசியம் என்பது மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நீண்ட கால வளர்ச்சியை மறந்து தேர்தல் லாபத்திற்காக முன்னெடுக்கப்படும் குறுகிய கால பலனுக்கான திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் அரசு என இரண்டு தரப்பிற்குமே பெரிய பலனளிக்காது என்பதே எதார்த்தம்.
Before You Go
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
ட்ரெண்டிங் செய்திகள்























