TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Tamil Nadu Govt Signs MoU: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கையெழுத்தான 3 தொழில் ஒப்பந்தங்கள் மூலம், 18 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கையெழுத்தான 3 புதிய ஒப்பந்தங்கள் மூலம் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின், புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். புதியதாக தொழில் தொடங்க வருவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் 21 நாட்களில் எல்லா அனுமதியும் வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் உறுதி அளித்து இருந்தார். இந்நிலையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கையெழுத்தான 3 தொழில் ஒப்பந்தங்கள் மூலம், 18 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கும் - எல் & டி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தங்கள்:
தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் தங்களது தொழில்களை விரிபடுத்தும் நோக்கில் அரசுடன் மூன்று புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம் மற்றும் உற்பத்தி நிறுவனமான L&Tயின் பிரதிநிதிகள் கடந்த 4ம் தேதி முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டுள்ள இந்த நிறுவனம், தற்போது புதியதாக மேலும் 18 ஆயிரத்து 600 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கும் மாநில அரசு முழுமையாக ஆதரவளிக்கும் என முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளாராம்.
மூன்று புதிய ஒப்பந்தங்கள் என்ன?
தமிழ்நாடு அரசுக்கும், லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான மூன்று ஒப்பந்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி,
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக தகவல் தரவு மைய விரிவாக்க திட்டத்தை மேற்கொள்ள உள்ளது
- கோயம்புத்தூரில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் பேருக்கு வேல்கைவாய்ப்பை வழங்கும் வகையில் மின்னணு பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது
- திருவள்ளூர் மாவட்டம் ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீட்டில் 5 ஆயிரத்து 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக காட்டுப்பள்ளி லார்சன் & டூப்ரோ கப்பல் கட்டுமான தளத்தை விரிவாக்கும் திட்டம்
ஆகியவை ஒப்பந்தமாகியுள்ளன. விஜய் முதலமைச்சரான பிறகு தமிழ்நாடு அரசு கையெழுத்தான முதல் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் என்பதால் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. 2036ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலர்கள் என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பது புதிய அரசின் இலக்காக உள்ளது.
அரசு தரப்பு பெருமிதம்
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சரின் லட்சிய இலக்கினை எய்துவதற்கான முயற்சியின் மைல் கல்லாக அமைந்துள்ள பல்துறை சார்ந்த இம்முதலீடுகளின் மூலம், மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் வளர்ச்சி பெறுவதுடன். மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும். மேலும் காட்டுப்பள்ளி திட்டம் கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுவரும். இத்திட்டங்கள் செயலாக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
ட்ரெண்டிங் செய்திகள்






















