MK Muthu Died: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.

மகனை MGR-ஆக்க முயன்ற கருணாநிதி:

பேரறிஞர் அண்ணா மறைவை தொடர்ந்து நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்று கருணாநிதி முதலமைச்சரானார். இந்த வெற்றியில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது. அப்படி இருக்கையில் தான் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், எம்.ஜி.ஆர் எப்போது வேண்டுமானாலும் திமுகவை விட்டு வெளியேறலாம் என கருணாநிதி முன்கூடிட்யே கணித்துவிட்டார். அப்படி நடந்தால் எம்.ஜி.ஆரை. பின்பற்றி திமுகவிற்கு வாக்களித்தவர்களின் ஆதரவை எதிர்காலத்தில் இழக்க நேரிடும் என்பதை உணர்ந்தார். அதன் விளைவாக, தனது மூத்த மகன் மு.க. முத்துவை, அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி. ஆருக்கு எதிராக திரைத்துறையில் களமிறக்கினார்.

MGR-ஐ காப்பியடித்த மு.க. முத்து

பிள்ளையோ பிள்ளை படத்தில் அறிமுகமான மு.க. முத்து, ஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸ் காப்பியாகவே திரையில் தோன்றினார். அதேபாணியிலான உடல்மொழி, சிகை அலங்காரம், முக அலங்காரம், ஆடைகள் என ஒட்டுமொத்தமாக மினி என்.ஜி. ஆராகவே காட்சியளித்தார். தொடர்ந்து பூக்காரி, சமையல்காரன் மற்றும் அணையா விளக்கு என பல படங்களில் நடித்தார். குறிப்பாக பிள்ளையோ பிள்ளை திரைப்படத்தின் படப்பிடிப்படை தொடங்கி வைக்க சென்ற எம்.ஜி.ஆர்.,, அந்த இடத்தில் தன்னை போன்றே இருந்த மு.க. முத்துவை பார்த்து ஷாக் ஆகியுள்ளார். தொடர்ந்து படம் ரிலீசாக அதனை பார்த்த பிறகு, நல்ல நடிகரான மு.க. முத்து தனக்கான பாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திவிட்டு வந்தார்.

ஆரம்பத்தில் ஓரளவிற்கு வெற்றிக் கிடைத்தாலும், காலப்போக்கில் தமிழ் சினிமாவில் ஒரே எம்.ஜி.ஆர். தான் என்பதை உணரும் அளவிற்கு மு.க. முத்து கடும் தோல்விகளை கண்டார். இதனிடையே, 1977ம் ஆண்டு எம்.ஜி. ஆர்., தலைமையிலான அதிமுக ஆட்சிக்கும் வந்துவிட்டது. இதையடுத்து மு.க. முத்துவின் ஒட்டுமொத்த திரைப்பயணம் மழுங்க தொடங்கியது.

ஜெயலலிதா நிதியுதவி

தோல்விகளால் துவண்டுபோன மு.க. முத்து மதுபோதைக்கு அடிமையாக, தந்தை கருணாநிதியும் அவரை ஒதுக்க தொடங்கினார்.  இருப்பினும் தேவையான நேரங்களில் உதவிகளையும் செய்து வந்தார். ஆனால்,  போதைக்கு அடிமையானது, தனது பரம எதிரியாக இருந்த ஜெயலலிதாவை அணுகி அதிமுக அலுவலகத்திற்கே சென்று ரூ.5 லட்சம் நிதியுதவி பெற்றது கருணாநிதியை முகவும் பாதித்தது. இதனால் தந்தை மகனுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

தந்தைக்கு எதிராக களமிறங்கிய மகன்

மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்த மு.க. முத்து தன்னை, திமுகவின் எதிரிக்கட்சியான அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதன் விளைவாக , தன் தந்தைக்கு எதிராகவே தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டார். கருணாநிதியின் வீட்டிற்கு அருகிலேயே வாடகை வீட்டில் வசித்து,  திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த கருணாநிதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மகனை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த 2009ம் ஆண்டு மு.க. முத்துவின் உடல்நிலை மிகவும் மோசமாக, தந்தை கருணாநிதி மீண்டும் ஆதரவுக்கரம் அளித்தார். இந்நிலையில் தான், சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்த மு.க. முத்து தனது 77வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.