Thiruma TVK: ”ஆமாஞ்சாமிக்கு, விசிலடிப்பது எவ்வளவோ மேல்” திருமாவளவனை தாக்கும் தவெக வாரியர்ஸ்
Thiruma TVK TN Election 2026: விசிலடிப்பவர்களை சட்டசபைக்கு அனுப்பாதீர்கள் என்ற விசிக தலைவர் திருமாவளவனின் கருத்துக்கு, தவெக தரப்பினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Thiruma TVK TN Election 2026: திமுகவிற்காக சொந்த கட்சியின் வளர்ச்சியையே திருமாவளவன் அடமானம் வைத்துவிட்டதாக, தவெகவினர் விமர்சித்து வருகின்றனர்.
தவெகவை விமர்சித்த திருமாவளவன்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பரப்புரை, கடலூரில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “விசிக தொண்டர்களே ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள். சட்டசபைக்கு வேண்டாம். அங்கு விசிலடிக்க முடியாது. இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றக்கூடிய திமுக அரசை மீண்டும் சட்டசபைக்கு அனுப்புங்கள்” என பேசினார். இவ்வாறு பெயரையே குறிப்பிடாமல் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை திருமாவளவன் விமர்சித்த நிலையில், அதற்கு தவெக தரப்பில் கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
”அறிவாலயம் சொல்வதை செய்யும் திருமா”
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார், “பாவம் திருமாவளவன், என்று அவர் திமுகவுடன் பயணிக்க தொடங்கினாரோ, அன்றே அவர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டார். தலித் மக்களின் மிகப்பெரிய பிரதிநிதியாக இருந்திருக்க வேண்டிய நபரின் வாழ்க்கை திமுகவால் முடிவுக்கு வந்துள்ளது. திமுக சொல்வதை கேட்டு திருமாவளவன் நடந்து கொள்கிறார். கடந்த ஆண்டு விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஆரம்பத்தில் சம்மதம் தெரித்தவர், திமுக சொன்னதால் பயந்து அந்த விழாவில் பங்கேற்வில்லை. அறிவாலயம் சொல்வதையே திருமா செய்கிறார். திமுக கூட்டணியில் இருப்பவர்கள், தனியாக முடிவெடுக்கும் உரிமையை இழந்துவிடுவார்கள். திமுகவின் கிளைக்கழகம் போன்றே செயல்பட முடியுமே தவிர, தனிப்பட்ட முடிவுகள் எடுக்க முடியாது. யார் என்ன சீட் வாங்க வேண்டும் எனவும் அவர்கள் தான் முடிவு செய்வார்கள், யாருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதையும் திமுக தான் முடிவு செய்யும்” என திருமாவளவனிற்கு சிடிஆர் நிர்மல் குமார் பதிலடி தந்துள்ளார்.
திருமாவை தாக்கும் தவெக வாரியர்ஸ்
இதனிடையே, சமூக வலைதளங்களிலும் தவெகவினர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன்படி, ”சொந்த கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பதை சுயமாக இறுதி செய்ய முடியவில்லை. அறிவித்தபடி காட்டுமன்னார் கோவிலில் வேட்பாளராக களமிறங்க முடியவில்லை. நேற்று கூட்டணிக்கு வந்த கட்சியால் பெற முடிந்த தொகுதிகளை கூட, சுமார் 10 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள உங்களால் பெறமுடியவில்லை. உழவர்கரையில் வேட்புமனுவை திரும்பப் பெறமுடியாது என காங்கிரஸ் கட்சியினர் முரண்டு பிடித்த நிலையில், அந்த கட்சியை சேர்ந்த ஒருவருக்கே நீங்கள் போட்டியிடுவதாக சொன்ன தொகுதியை விட்டுக்கொடுக்கிறீர்கள்” இப்படி திமுக சொல்வதற்கும், அவர்களது நலன் சார்ந்தே ஆமாஞ்சாமி போடுவதற்கும், விசில் அடிக்கும் நாங்கள் எவ்வளவோ பரவாயில்லை என தவெக வாரியர்ஸ் கடுமையாக சாடி வருகின்றனர். ஒரு கட்சி கம்பத்தை கூட நடமுடியவில்லை என புலம்பிவிட்டு, பல ஆண்டுகள் உங்களுடன் உழைத்தவர்களுக்கான வாய்ப்புகளை பெற முடியாவிட்டாலும் திமுக கூட்டணியில் தொடர்கிறீர்களே திருமா, இது நியாயமா? என பல கேள்விகளையும் விமர்சனங்களையும் திருமாவை நோக்கி தவெகவின் எழுப்பி வருகின்றனர்.
























