CM Stalin: வெறுப்பை பற்றி எல்லாம் யோகி ஆதித்யநாத் வகுப்பு எடுக்கலாமா என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்:
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடுத்த நேர்காணல் தொடர்பான வீடியோவை டேக் செய்து, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இருமொழிக் கொள்கை மற்றும் நியாயமான தொகுதி மறுவரையறை குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பாஜக தெளிவாக அதிர்ச்சியடைந்துள்ளது. அவர்களின் தலைவர்களின் நேர்காணல்களைப் பாருங்கள். யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறார்? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல - இது ஒரு சிறந்த அரசியல் நகைச்சுவை. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
யோகி ஆதியநாத் சொல்வது என்ன?
ANI நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் பேசிய யோகி ஆதித்யநாத், “
ஸ்டாலின் தனது வாக்கு வங்கிக்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்ததால், பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயற்சிக்கிறார். மக்களைப் பிரிக்காமல் மொழி ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். செழுமையான வரலாறு மற்றும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் பழமையான மொழிகளில் தமிழ் ஒன்று. அது சமஸ்கிருதத்தை போன்று பழமையான வரலாற்றை கொண்டுள்ளது. இந்திய பாரம்பரியத்தின் பல கூறுகள் இன்றும் இந்த மொழியில் உயிருடன் இருப்பதால், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மீது மரியாதையும் பற்றும் கொண்டுள்ளனர். எனவே நாம் ஏன் இந்தியை வெறுக்க வேண்டும்? இதுபோன்ற பிரிவினைவாத அரசியலுக்கு இந்த நாட்டு மக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், நாட்டின் ஒற்றுமைக்காக உறுதியாக நிற்க வேண்டு. தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக முன்னெடுத்து இருக்கும் நடவடிக்கை என்பது, ஸ்டாலின் அரசியல் அஜெண்டா. இது ஒரு குறுகிய அரசியல் மனப்பான்மை” என யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
இதற்கு தான், வெறுப்பு உணர்வை பற்றி எல்லாம் யோகி ஆதித்யநாத் பேசலாமா? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காரணம் அவர் முதலமைச்சராக உள்ள உத்தரபிரதேசத்தில், சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.