CM Vijay: காவிரி நீர் மற்றும் மேகதாது திட்டம் தொடர்பான பிரச்னைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளாராம்.

Continues below advertisement

கர்நாடக முதலமைச்சரை சந்திக்கும்  CM விஜய்?

தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கொடுக்காமல் இழுத்தடித்து வரும் கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் தொடர்பான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சந்திப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையை சுமூகமாக முடிக்க முதலமைச்சர் விஜய் பெங்களூருவிற்கே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் எனவும் கூறப்படுகிறது. 

Continues below advertisement

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகா

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால்  ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீரும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடாத சூழல் நிலவுகிறது.  இதையடுத்து கடந்த 22ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கர்நாடக அணைகளில் பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு கூறியதை கருத்து அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளது.

முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டம்:

கர்நாடக அரசு தொடர்ந்து இதே நடவடிக்கையை பின்பற்றினால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.  குறுவையை தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியிலும் சிக்கல் ஏற்படக்கூடும். இதையடுத்து மாநிலத்துக்கு உரிய நீர் பெறுவதற்கான, சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அண்மையில் முதலமைச்சர் விஜய் தலைமையில், தலைமைச் செயலகத்தில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் தான், கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாரை தானே நேரில் சந்தித்து பேச முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஏதேனும் சுமூக முடிவு எட்டப்பட்டால் காவிரி நீரை நம்பியுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெருமகிழ்ச்சி கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. முன்னதாக, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு தமிழகத்திற்கான காவிரி நீரை பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர்களான ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்: CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்