ஒரு கட்சியின் பேராசைக்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது என்றும் எந்தக் காலத்திலும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைச் செயல்படுத்த முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


2014ஆம் ஆண்டுமுதல் பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிந்து வருகிறது. மக்களவை தேர்தல் அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். கடந்த சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முன்னுரிமையாக உள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றார். அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் பேசியிருந்தார். 


இதற்கிடையே குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.


இந்த நிலையில் நடைமுறை சாத்தியம் இல்லாதது என்றும் மாநில உரிமைகளைப் பறிப்பது எனவும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


’’இந்தியாவின் பன்மைத்துவ தேர்தல் முறையின் சிக்கல்களைப் புறக்கணித்து, கூட்டாட்சித் தன்மையைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற கருத்தாகும். தேர்தல் நிகழ்வுகள், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் அரசு நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டால், இது  சாத்தியமற்ற ஒன்று. இது ஆட்சியின் இயல்பான போக்கை சீர்குலைத்துவிடும்.


இந்த பரிந்துரை முழுவதும் பாஜகவின் ஈகோவை திருப்திப்படுத்தும் நடவடிக்கைதான், ஆனால் அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது.






ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப வளைக்க முடியாது


இந்திய ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப வளைக்க முடியாது. மத்திய அரசு இத்தகைய திசைதிருப்பல்களில் நேரத்தை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மாநிலங்களுக்கு நிதியை சமமாக விநியோகித்தல் போன்ற முக்கியமான பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்’’.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.