பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவசர அவசரமாக டெல்லி கிளம்பி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைக்கச் சொன்னால், தன்னுடைய மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என பேசியிருந்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியானது.



பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை


ராஜினாமா கடிதம் அனுப்பினாரா அண்ணாமலை ?


ஆனால், அப்படி ஒரு ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அனுப்பவில்லையென்றும் அவர் அனுப்பியது கட்சியில் பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி, நிர்வாக சீர்த்திருத்தம் செய்ய அனுமதி கேட்டு, அமித் ஷாவிற்கு எழுதிய கடிதம் தான் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையிலேயே, இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அமித் ஷா இன்று டெல்லிக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.


திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை டெல்லி எடுத்துச் சென்ற அண்ணாமலை


அதோடு, அடுத்த மாதம் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை இணையதளத்தில் வெளியிடப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளது குறித்து பேசுவதற்கும் அது தொடர்பான விவரங்களை கேட்டு அறிந்துக்கொள்வதற்கும் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அவர்கள் எங்கெங்கு சொத்துக்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்ற ஆதாரங்களையும் கையோடு அண்ணாமலை டெல்லி எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


கர்நாடக மாநில தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை


கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வரவிருக்கும் நிலையில், அம்மாநில பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலையிடம், தேர்தல் வியூகங்கள், பிரச்சாரங்கள் தொடர்பாகவும் அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.


ஆபரேஷன் Traitors – அதிரடிக்கு தயாராகும் அண்ணாமலை


அதே நேரத்தில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி, எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவை தமிழ்நாட்டில் தயார்ப்படுத்த வேண்டுமென்றால், கட்சியில் உள்ள துரோகிகள், செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுவோரை முதலில் களையெடுக்க அனுமதி தர வேண்டும் என்றும் அமித் ஷாவிடமும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடமும் அண்ணாமலை வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.


அதற்காக, கட்சிக்காக உழைக்காமல், தன் சுயநலத்திற்காக கூட இருந்தே குழி பறிப்போரின் பட்டியலையும் அண்ணாமலை கையில் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.  அமித் ஷா இதற்கு அனுமதி கொடுக்கும்பட்சத்தில் பாஜகவில் விரைவில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்பதில் சந்தேகமில்லை.


அதிமுக கூட்டணி வேண்டாம் – தனித்து நின்று பலத்தை பார்ப்போம்


 அதோடு, அதிமுகவினர் தொடர்ந்து பாஜகவினரை தாக்கி பேசுவதும், சிவி சண்முகம், கேபி முனுசாமி போன்ற மூத்த தலைவர்களை வைத்து கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி பாஜகவை கழிட்டிவிடும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பது குறித்தும் அமித் ஷாவிடம் தெரிவித்து, அதிமுகவினருக்கு முன்னர் நாமே கூட்டணியை முறித்துக்கொண்டு, தமிழ்நாட்டிலும் பாஜக தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணியை உருவாக்கி போட்டியிடலாம் என்ற யோசனையையும் அண்ணாமலை வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


எனவே, அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய பிறகு பாஜகவிலும் தமிழக அரசியல் களத்திலும் பல்வேறு பரபரப்பு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது