பொதுவா ஒரு மாநில கட்சியோட தலைமை குறித்து முடிவு பண்றது, தேசிய தலைமையாதான் இருக்கும். ஆனா, பாஜக தமிழ்நாடு தலைவர் பதவியோட தலையெழுத்தே வேற. ஆமாங்க, அந்த பதவி யாருக்கு அப்படீங்கறது, அதிமுக கைலதான் இருக்குன்னு சொல்றாங்க. இது என்ன கதைன்னு பார்க்கலாம் வாங்க.
தலைவர் ரேஸில் குதித்த சீனியர்ஸ்
பாஜக தமிழ்நாடோட தலைவரா இருக்கற அண்ணாமலையோட பதவிக்காலம் முடிஞ்ச நிலையில, அடுத்த தலைவர் யார் அப்படீங்கற கேள்வி கொஞ்ச நாளா கேட்கப்பட்டுட்டு வருது. அண்ணாமலையே தலைவரா தொடர்வார்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில, திடீர்னு பாஜகவுல இருக்கற மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கான ரேஸ்ல குதிச்சாங்க. அண்ணாமலை மேல சொந்த கட்சியினருக்கே அதிருப்தி இருக்கறதாவும், அதனாலதான் இத்தனை பேர் தலைவர் பதவிக்கான போட்டியில இறங்கியிருக்கறதாவும் சொல்லப்பட்டுச்சு. இதனால, ஆட்டம் ரொம்பவே சூடுபிடிச்சது.
இழுபறியில் இருக்கும் பாஜக தமிழ்நாடு தலைவர் பதவி
இந்த நிலையில, பாஜக தமிழ்நாடு தலைவர் யார் அப்படீங்குறத முடிவு பண்ண பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வர்றதாவும், அவர் வந்து எல்லார் கிட்டயும் பேசுனதுக்கு அப்புறம், பாஜக தமிழ்நாடு தலைவர் பத்தின அறிவிப்பு வெளியாயிடும்னும் சொல்லப்பட்டு வந்துச்சு. ஆனா, கிஷன் ரெட்டி இன்னும் சென்னைக்கு வரவே இல்ல. அதனால, தலைவர் பதவி யாருக்குங்கறதும் இன்னும் இழுபறியாவே இருக்கு.
அதிமுக கையில் பாஜக தமிழ்நாடு தலைவர் பதவி.?
ஒரு பக்கம் பாஜக தமிழ்நாடு தலைவருக்கா ரேஸ் பரபரப்பான கட்டத்த எட்டியிருக்கற நிலையில், இன்னோரு பக்கம், அதிமுக கையிலதான் அந்த முடிவு இருக்குன்னு ஒரு தகவல் வெளியாகியிருக்கு. அது எப்படீன்னா, அடுத்த வருஷம் தேர்தல் வர்றதுனால, கூட்டணிய முடிவு பண்ற கட்டத்துல முக்கிய கட்சிகள் எல்லாம் இருக்கு. தமிழ்நாட்ட பொறுத்தவரைக்கும், அதிமுகவும் பாஜகவும் தனித்தனியா நிக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லைன்னு அவங்களுக்கே நல்லா தெரியும். அதனால, இப்போ கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமா போயிட்டு இருக்கு.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு தடையா அண்ணாமலைதான் இருக்கார்னு ஒரு பேச்சு ஏற்கனவே இருக்கு. முன்னாடியே, கூட்டணி பிரிஞ்சதுக்கும் அவர்தான் காரணம்னு அதிமுக மட்டுமில்லாம, பாஜகவுல இருக்குற சில தலைவர்களே கூட சொன்னாங்க. அதனால, பாஜகவோட மறுபடியும் சேரக் கூடாதுன்ன எடப்பாடி பழனிசாமி உறுதியா இருக்குறதாவும் தெரியுது.
இந்த நிலையில, அண்ணாமலை தலைவரா தொடர்ந்தா, அதிமுக உடனான கூட்டணிக்கு வாய்ப்பே இல்லைங்கறதுனால, அவர மறுபடியும் தலைவரா நியமிக்கக் கூடாதுன்னு பாஜகவினர் சிலர் மேலிடத்துக்கு சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கு. அதனால, அண்ணாமலையையே மறுபடியும் தலைவரா போடுற முடிவுல இருந்த தலைமை, இப்போ யோசிக்க ஆரம்பிச்சுருக்கறதா சொல்லப்படுது. ஒருவேளை தலைவர மாத்துனா கூட்டணிக்கு அதிமுக சம்மதிக்கும் ஒரு நிலைமை வந்தா, வேற ஒருத்தர தலைவரா அறிவிக்கவும் வாய்ப்பு இருக்குன்னு சொல்லப்படுது. இந்த சூழல்ல, பாஜக தமிழ்நாடு தலைவர் பதவியோட தலையெழுத்து, அதிமுகவோட கையிலதான் இருக்குங்கறது தெளிவா தெரியுது.
அதிமுக-பாஜக கூட்டணி பற்றி உலா வரும் வேறு ஒரு தகவல்
இதுக்கு இடையில, எடப்பாடி பழனிசாமியோட வாரிசு மிதுன் கிட்ட அண்ணாமலை பேசிட்டதாவும், அவர டெல்லிக்கே கூட்டிட்டுபோய் அமித் ஷாவ சந்திச்சு, கூட்டணி பத்தி முடிவு பண்ணிட்டதாவும் ஒரு தகவல் உலா வருது. அந்த சந்திப்பின்போது, அதிமுக பத்தி இனிமே எதுவும் பேச மாட்டேன்னு அண்ணாமலை உறுதி அளிச்சுருக்கறதாவும், எடப்பாடி பழனிசாமி கிட்ட பேசிட்டதாவும், அதிமுக 3 மாசம் டைம் கேட்டுருக்கறதாவும் சொல்லப்படுது.
இந்த தகவல்கள்ல எது உண்மைன்னு, கொஞ்ச நாள் வெயிட் பண்ணாதான் தெரியும். தேர்தல் வேலைகள பார்க்கணும்ங்கறதால, சீக்கிரமே முடிவு வந்துடும்னு நம்பலாம்.