அடுத்த பாஜக மாநிலத் தலைவர் என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. அண்ணாமலை போட்டியில் இல்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், ஆனந்தன் அய்யாசாமி ஆகியோருக்கு வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

தலைவரையே மாற்ற முடிவு செய்த பாஜக 

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கூட்டணிக் கணக்குகள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக பாஜக, அதிமுகவுடன் கூட்டணி சேர ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், தலைவரையே மாற்ற பாஜக முடிவு செய்தது.

பாஜக தலைவர் மாற்றப்படுவார் என்று தகவல் வெளியான நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அவர்தான் அடுத்த தலைவர் என்று பேசப்பட்டது.

அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற ஒருவருக்கு தலைவர் பதவியா?

எனினும் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற ஒருவருக்கு தலைவர் பதவி கொடுப்பதா என ஆர்.எஸ்.எஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்ட பாஜக தலைவராக உள்ள ஆனந்தன் அய்யாசாமிக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்க ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து டெல்லி தலைமைக்கு ஆலோசனை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தென்காசியைச் சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமியும் பாஜக தலைவர் ரேஸில் இணைந்த நிலையில், பாஜக துணைத் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மாநிலத் தலைவர் மற்றும் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின்‌ இணையதளமான என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

நாளை விருப்ப மனுத்தாக்கல்

நாளை 11.04.2025, வெள்ளிக்கிழமை மதியம்‌ 02.00 மணி முதல்‌ மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள்‌ விருப்ப மனுவை மாநிலத்‌ தலைமை அலுவலகத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும்.

மாநிலத் தலைவருக்கான தேர்தல்‌

மாநில தலைவர்‌ பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள்‌ படிவம்‌ F பூர்த்தி செய்ய வேண்டும்‌.

மூன்று பருவம்‌ தீவிர உறுப்பினராகவும்‌ மற்றும்‌ குறைந்தது பத்து வருடங்கள்‌ அடிப்படை உறுப்பினராகவும்‌ உள்ளவர்‌ மாநில தலைவர்‌ பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்‌. இவரை கட்சியில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்‌ 10 பேர்‌ அவரிடம்‌ இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல்‌ பெற்று பரிந்துரைக்க வேண்டும்‌.

தேசிய பொதுக்குழு உறுப்பினர்‌ பதவிக்கான தேர்தல்‌

தேசிய பொதுக்குழு உறுப்பினர்‌ பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள்‌ படிவம்‌ E பூர்த்தி செய்ய வேண்டும்‌.

மாநில பொதுக்குழு உறுப்பினர்‌ ஒருவர்‌ முன்‌ மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர்‌ வழிமொழிய வேண்டும்’’ என்று பாஜக தெரிவித்துள்ளது‌.

யாருக்கு வாய்ப்பு?

இதனால் தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், ஆனந்தன் அய்யாசாமி ஆகியோருக்கு வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரும் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ''பாஜக வெளியிட்டுள்ள விதிகளின்படி, மூத்த தலைவரே பாஜக தலைவராக முடியும். ஆர்எஸ்எஸ் பின்னணியில் உள்ள ஒருவரே தலைவராக வாய்ப்புள்ளது. தேவையான பட்சத்தில், தேர்தல் விதிகளைத் தளர்த்தவும் வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர்.