பாஜக-வின் தேசிய தலைவர் பதவியை விட, தமிழக பாஜக தலைவர் பதவி குறித்த செய்திகள் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக மாறிவிடுகின்றன. அந்த அளவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எப்போதும் செய்திகளில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ முதன்மையாகத் தென்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுப்பு கேட்டு அண்ணாமலை கடிதம்:
இந்தச் சூழலில்தான், அண்ணாமலை, தற்போது 6 மாத விடுப்புக் கேட்டு, பாஜக தலைமைக்கு விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக கடிதமொன்றை, அவர் தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும், பாஜக தலைமை நிர்வாகிகள், இது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அண்ணாமலையின் விடுப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என டெல்லி பாஜக தலைமையக வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஏன் விடுப்பு கோருகிறார் அண்ணாமலை?
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்பு ஓய்வு பெற்ற அண்ணாமலை, தமிழக பாஜக தலைவரானப் பிறகு, தொடர்ந்து பிஸியாகவே இருந்து வருகிறார். பல சர்ச்சைகள், விமர்சனங்கள் இருந்தாலும், கட்சியின் செயல்பாடுகளில் எப்போதும் பரபரப்பு இருந்து வருவதை உறுதி செய்துள்ளார் அண்ணாமலை. அதுமட்டுமல்ல, அண்மையில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை பாஜக பெறுவதற்காக காரணமாக இருந்துள்ளார் என்பதும் அவருக்கு வலு சேர்க்கும் விடயம். இந்தச்சூழலில்தான், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான சான்றிதழ் படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது அண்ணாமலைக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துதான், 6 மாத விடுப்பு கேட்டு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
அண்ணாமலை விடுப்பிற்கு வேறு பின்னணி உண்டா?
அண்ணாமலையின் விடுப்பு கேட்பிற்கு, லண்டனில் சான்றிதழ் படிப்பு ஒரு காரணமாக கூறப்பட்டாலும், இந்த மாதத்துடன் அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிவடைகிறது. பொதுவாக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தலைவர் மாற்றப்படுவார் அல்லது அவரே தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்படுவது பாஜக-வில் வழக்கம். அந்த வகையில், இந்த மாதத்துடன் 3 ஆண்டுகளை அண்ணாமலை நிறைவு செய்வதால், அவர் மாற்றப்படும் முன், விடுப்பு கேட்டு செல்வதுடன், மீண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் நாடு திரும்பும் போது, புதிய பொறுப்புடன் கட்சிப் பணியில் ஈடுபடலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை தந்ததாகப் பேசப்படுகிறது. ஆனால், அண்ணாமலையைப் பொறுத்தவரை, தன் வழி தனி வழி என்ற வகையில் அரசியல் செய்பவர். எனவே, பதவியிலிருந்து விலகுவதற்கு முன், விடுப்பு கேட்டு செல்வது சிறந்தது என முடிவு செய்துதான், விடுப்புக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
புதிய தலைவரா? தற்காலிக தலைவரா?
அண்ணாமலையின் விடுப்பு கோரிக்கையை ஏற்று, அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டால், தமிழக பாஜக-வின் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 6 மாத விடுப்பிற்குப் பிறகு அண்ணாமலை மீண்டும் வந்துவிடுவார் என்பதால், அதுவரை தற்காலிக தலைவரை நியமிக்கலாமா அல்லது புதிய தலைவரை நியமித்துவிட்டு, அண்ணாமலை வரும் போது, அவரை டெல்லி அரசியலுக்கு, அதாவது அமைச்சர் பதவி தந்து அழைத்துக் கொள்ளலாமா என பாஜக டெல்லி தலைமை யோசித்து வருகிறதாம். இந் நிலையில், டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், வானதி சீனவாசன், நயினார் நாகேந்திரன், முருகானந்தம் உள்ளிட்ட பல பெயர்கள், புதிய தலைவர் இவர்தான் என தற்போதே பாஜக மாநில வட்டாரங்களில் உலா வருகிறது.
பாஜக தலைமை முடிவு என்ன?
டெல்லி பாஜக தலைமையை பொறுத்தவரை, வரும் 7-ம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. ஏனெனில், நாடாளுமன்றம் நடைபெறும் வரை, அதுவரை இது தொடர்பான எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள். அதன்பின், கட்சியை வளர்த்த அண்ணாமலையின் விடுப்புக்கு ஓகே என்ற சொல்லிவிட்டு, அதாவது தலைவர் பதவியிலிருந்து கெளரவமாக நீக்கிவிட்டு, டெல்லி தலைமைக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் ஒத்துப்போகும் ஒருவரை தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்ல, அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் அண்ணாமலை நாடு திரும்பும் போது, அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து, மத்தியில் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, விரைவில், தமிழக பாஜக-விற்கு புதிய தலைமை வர வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பிறகு மாற்றம் வரும் என பலர் கூறிய போது, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, அண்ணாமலைதான் தொடர்ந்து தலைவர் என சிலர் கூறினா். ஆனால், தற்போது அண்ணாமலையில் வெளிநாடு படிப்பு பயண காரணத்தால், சர்ச்சை ஏதுமின்றி அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய தலைவர் வருகிறார் என பாஜக உள்விவகாரம் அறிந்தோர் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசியலில் எதுவும் அதிகாரப்பூர்வாக வந்தப் பிறகே உறுதியாகும் என்பதால், அறிவிப்பு வரும் வரை காத்திருக்கிறது தமிழக அரசியல்.