Seeman Annamalai Meet: சீமானை திடீரென சந்தித்த அண்ணாமலை! என்ன பேசிகிட்டாங்க தெரியுமா?
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை திடீரென சந்தித்த அண்ணாமலை அவரிடம் தொடர்ந்து போராடுங்கள் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள் தங்களது பயணத்தை முன்னோக்கி நகர்த்தி வருகின்றனர். தமிழக அரசியலில் முக்கியமான அரசியல் கட்சியாக இருப்பது நாம் தமிழர். ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் இவர்களின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. அதேபோல, தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய பலமாக இருப்பவர் அண்ணாமலை.
அண்ணாமலை - சீமான்:
திமுக-விற்கும், திமுக அரசிற்கும் எதிரான நிலைப்பாட்டை நாம் தமிழரும், தமிழக பா.ஜ.க.வும் கொண்டுள்ளன. இந்த நிலையில், சென்னையில் நாம் தமிழர் சீமானும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் திடீரென சந்தித்தனர். அதாவது, திருமண நிகழ்ச்சியில் இருந்து காரில் சீமான் புறப்பட்டபோது திருமண நிகழ்ச்சிக்கு அண்ணாமலை வந்தார். அப்போது, சீமானை அண்ணாமலை சந்தித்தார்.
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா:
அப்போது, காரில் இருந்த சீமானை காரின் வெளியே நின்ற அண்ணாமலை சந்தித்தார். அப்போது, சீமானுக்கு காரின் உள்ளே கைகளை கொடுத்து "ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா.. ஸ்ட்ராங்க இருங்க" என்று அண்ணாமலை கூறினார். தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கருத்தியல் ரீதியாக சீமான் - அண்ணாமலை இருவரும் அவ்வப்போது மோதல் போக்கை கொண்டாலும், பெரியார் விவகாரத்தில் சீமானுக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த சூழலில், சீமானிடம் அண்ணாமலை ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சவால் தரும் சட்டமன்ற தேர்தல்:
வரும் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. திமுக, அதிமுக கட்சிக்கு போட்டியாக இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் உருவெடுத்துள்ளது. திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் தமிழர், தமிழக பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றனர். பலமான திமுக கூட்டணியை உடைக்கும் நோக்கில் தற்போது எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், நாம் தமிழர் மற்றும் பா.ஜ.க. வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யும் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள விசிக உள்ளிட்ட சில கட்சிகளை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறார். பெரியார் விவகாரத்தில் சீமானுக்கு ஏராளமான பின்னடைவுகள் ஏற்பட்டது.
இந்த விவகாரத்திற்கு பிறகு நாம் தமிழர் கட்சியில் இருந்த ஏராளமான நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து விலகினர். மேலும், நாம் தமிழர் கட்சியின் முக்கிய உருவமாக திகழ்ந்த காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.