CM Stalin: 41 பேர் பலி, விஜய் தான் காரணம் - சட்டப்பேரவையில் அடித்துச் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin On Vijay: தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Stalin On Vijay: கரூர் பரப்புரையின்போது தவெக தரப்பில் அடிப்படை ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
விஜய் தான் காரணம் - ஸ்டாலின்
கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் நெரிசலுக்கு காரணம்" என தெரிவித்தார்.
கரூர் துயரம் - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்
தொடர்ந்து பேசுகையில், தவெக தலைவர் நண்பகல் 12 மணிக்கு கரூருக்கு வருவதாக அறிவித்துவிட்டு இரவு 7 மணிக்குதான் வந்தார். மதியம் 12 மணிக்கு வருவதாக அறிவித்ததால் காலை முதலே மக்கள் காத்திருந்தனர். அப்படி காத்திருந்தவர்களுக்கு கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்திக்க வேண்டும். அவை கரூரில் செய்யப்படவில்லை. காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. அதே இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தனர். கட்டுப்பாட்டோடு நடந்துக் கொண்டனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
உரிய பாதுகாப்பு அளித்தோம் - ஸ்டாலின்
மேலும் “வழக்கமான அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட கரூர்
தவெக பரப்புரையில் கூடுதலாகவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவலர்கள், அதிகாரிகள் என அன்று மொத்தம் 606 பேர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். கரூர் தவெக பரப்புரை நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு அரசே காப்பாற்றியது. கூட்டத்தில் சிக்கியவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்தது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது. ஆனால் கூட்டத்தில் இடையூறு செய்ய வந்ததாக தவெகவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கினர்.
உடல்களை வைக்க இடவசதி இல்லை - ஸ்டாலின்
உடல்களை வைக்க போதிய இடவசதி இல்லாததால் அன்று இரவே உடற்கூறாய்வு செய்யப்பட்டது கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் தனிக்குழு அமைத்து அன்று இரவே உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்காக அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
நான் எனது 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும் கட்டுப்பாடுகளை மீறும் போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.





















