ராமதாஸ் பற்றி பேசிய செல்வப்பெருந்தகை: காங்கிரஸ்-விசிக இடையே வெடித்த கருத்து மோதல்! நடந்தது என்ன?
Congress Vs VcK: "தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது"

தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை தங்களது கூட்டணி கட்சிகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
திமுக தனது பழைய கூட்டணியை அப்படியே தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அக்கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடையே 'ராமதாஸ் அணி' விவகாரம் தொடர்பாக பகிரங்கமான கருத்து மோதல் வெடித்துள்ளது.
செல்வப்பெருந்தகையின் கருத்து
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக கூட்டணியில் இணைவது குறித்துப் பேசுகையில்: "ராமதாஸ் அணி திமுக கூட்டணிக்கு வருவதைப் பற்றி திமுக தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இக்கூட்டணியின் தலைமை திமுகதான். விசிக மற்றும் பாமக ஆகிய இரு தரப்பும் முன்பு நெருக்கமாக இருந்தவர்கள்தான். தேவைப்பட்டால் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிச் சரிசெய்து கொள்வார்கள். அவர்களுக்குள் பெரிய இடைவெளி கிடையாது; இணக்கமாக இருந்தவர்கள்தான்," எனத் தெரிவித்தார்.
விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி கடும் கண்டனம்
செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விசிக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாகத் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "கூட்டணியில் யார் இடம்பெறுவார்கள் என்பதை திமுக முடிவெடுக்கும் என்பதை நாங்களும் ஏற்கனவே சொல்லிவிட்டோம். ஆனால், சாதியவாத மற்றும் மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என்ற எங்களது உறுதியான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வோம் என்கிற தோற்றத்தைத் திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை."
பரபரப்பான அரசியல் சூழல்
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ஒரு சில நிர்வாகிகள் மறைமுகமாக திமுகவை விமர்சித்து வருவதாகச் செய்திகள் கசிந்து வரும் நிலையில், தற்போது கூட்டணியில் உள்ள இரு முக்கியக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பு, கூட்டணிக்குள் சிறு விரிசலை ஏற்படுத்துமோ என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.























