(Source: Poll of Polls)
TN Assembly EPS: கரூர் துயரம் - 3 மேடை, 31 உடல்கள் - திமுக அரசுக்கு எடப்பாடி அடுக்கிய சரமாரியான கேள்விகள்
TN Assembly EPS: சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் துயரம் தொடர்பாக அரசை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

TN Assembly EPS: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஒரே நாளில் பிரேத பரிசோதனை செய்தது எப்படி? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
”500 பேரை காண முடியவில்லை” - எடப்பாடி
கரூர் துயர சம்பவம் தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இருந்து சக அதிமுக உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெகவின் கரூர் பரப்புரையின் போது 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததாக,காவல்துறை அதிகாரி தெரிவித்தார். ஆனால், அந்த கூட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது, அங்கு 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததாக பார்க்க முடியவில்லை. தவெக தலைவர் பேசும்போது எத்தனை காவலர்கள் அந்த சம்பவ இடத்தில் இருந்தனர்? ஏடிஜிபி சொன்ன காவலர்களின் எண்ணிக்கைக்கும், முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன எண்ணிக்கைக்கும் முரண்பாடு இருக்கிறது. இதனால் தான் மக்களுக்கு இந்த சம்பவத்தில் மிகப்பெரிய சந்தேகம் நிலவுகிறது.
”உள்நோக்கத்தோடு இட ஒதுக்கீடு”
வேலுச்சாமி புரத்தில் கூட்டம் நடத்த அதிமுக அனுமதி கேட்டபோது, போக்குவரத்து மிகுந்த பகுதி மற்றும் குறுகிய சாலை என்பதாலும் அங்கு அனுமதி வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. ஆனால், அதே இடத்தை தான் தவெகவிற்கு இன்று காவல்துறை ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே நான்கு மாவட்டங்களில் விஜயின் கூட்டத்திற்கு எத்தனை பேர் வந்தார்கள் என்பது அரசுக்கு தெரியும். அப்படி இருந்தும் இதில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசின் அலட்சியத்தாலும், காவல்துறை முழுமையாக பாதுகாப்பு வழங்காததாலுமே நடந்ததாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.
31 பேருக்கு உடற்கூறாவு எப்படி?
கூட்ட நெரிசலில் சிக்கி 28ம் தேதி காலை வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக இருந்தது. அதன் பிறகு 2 பேர் உயிரிழந்தனர். இதில் அவசர அவசரமாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இரவோடு இரவாக உடற்கூறாய்வு தொடங்குகிறது. கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய, அமைச்சர் சொன்னபடி 3 டேபிள்கள் தான் உள்ளன. அப்படி இருக்கையில் ஒரே நாளில் 39 பேருக்கு எப்படி பிரேத பரிசோதனை செய்ய முடிந்தது? கைதேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யமுடியும். அதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்ததகாவும் சொல்கின்றனர். அப்படி இருந்தாலும் நான் செல்லும்போதே, இரவு 1.45 மணியில் இருந்து காலை 8 மணிக்குள் 31 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுஇ இருந்தது. ஒரு உடலை உடற்கூறாய்வு செய்ய, விதிமுறைகளின்படி சுமார் ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். அப்படி இருக்கையில் 31 பேருக்கு எப்படி, இவ்வளவு வேகமாக உடற்கூறாய்வு செய்ய முடிந்தது? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒரு நபர் ஆணையம் மீது விமர்சனம்
ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது. உதவியாளர் உட்பட எந்தவித வசதிகளும் மேற்கொள்ளப்படாவிட்ட்டாலும், மறுநாள் மதியமே அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் சொன்ன விவரங்களை பதிவு செய்ய கூட, அவருடன் யாருமே இல்லை. இதையெல்லாம் ஒரு நாடகமாக அரசு அரங்கேற்றியுள்ளது. உண்மையை மறைப்பதற்கான அரசின் நாடகம் தான் இது. அதோடு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நியமிக்கப்பட்ட செயலாளர்கள், தவெக தலைவர் இந்த விதிகளை எல்லாம் பின்பற்றி இருந்தால் சம்பவம் நடந்து இருக்காது என பேட்டி அளிக்கின்றனர். ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், எந்த தகவலாக இருந்தாலும் அதனை ஆணையத்திடம் தான் முறையிட வேண்டும். ஆனால், அரசாங்கமே சம்பவத்திற்கு தவெக தரப்பு தான் காரணம் என கூறும்போது, ஒருநபர் ஆணையம் எப்படி நேர்மையாக செயல்படும்?
கிட்னி முறைகேடு வழக்கு:
இதே ஆட்சியில் தான் கிட்னி முறைகேடு கண்டறியப்பட்டது. தொடர்பான மருத்துவமனையில் சோதனையும் நடத்தப்பட்டது. முறைகேடும் உறுதி செய்யப்பட்டு, அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால், அரசு அதனை தற்போது வரை நிறைவேற்றவில்லை. கரூர் விவகாரத்தில் காட்டிய அக்கறையை, கிட்னி விவகாரத்தில் காட்டவில்லை” என எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.





















