கொங்கு மண்டலமே நமக்கு டார்கெட்... தாமகவின் தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளிடம் ரகசியம் பேசிய ஜி.கேவாசன்
அதிமுக தலைமையில் வெற்றி வாய்ப்பு பிரகாசம் – கொங்கில் தேர்தல் வியூகம் வகுத்த தாமக.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தாமக தேர்தல் திட்டம்
கூட்டத்திற்குப் பிறகு கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு TMC வியூகங்கள் அடிப்படையில் கொங்கு மண்டல கூட்டம் நடைபெறுகிறது என்றும், வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்திலிருந்து TMC சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார். அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என்றும், கொங்கு மண்டலத் தொகுதிகளில் இருந்து போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக தலைமையில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார். சாதாரண வாக்காளர்களை ஏமாற்றும் வகையில் அரசு செயல்படுகிறது என்றும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளது என்றும் விமர்சித்தார்.
எல்லாம் தேர்தல் நோக்கமே
போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது என்றும், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் அவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மகளிருக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தாங்கள் எதிர்ப்பில்லை என்றாலும், தேர்தல் சூழ்நிலையில் 5ஆயிரம் ரூபாய் பெண் பயனாளிகளின் வங்கி கணக்கில் போட்டது எல்லாம் தேர்தல் நோக்கத்துடனான நடவடிக்கை என விமர்சித்தார்.























