அதிமுகவில் இரட்டை தலைமை நீடித்து வந்த நிலையில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற விவகாரம் பெரிய பிரச்னையை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த மூன்று தினங்களாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின்னர் இருவரின் வீடுகளில் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனிடையே அதிமுக பொதுக்குழு சென்னையில் 23 ஆம் தேதி கூட உள்ளது. அதனைத்தொடர்ந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்பதே, அதிமுகவின் சாதாரண தொண்டனின் விருப்பமாக உள்ளது என்றும் அதே போன்று திண்டுக்கல் பகுதியில் ஒற்றை தலைமை ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குறிப்பாக நேற்று சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, வீரபாண்டி ராஜா, சேலம் தெற்கு பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், அதிமுக கவுன்சிலர்கள், சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் போன்ற அனைத்து தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்து சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், மாவட்ட செயலாளர்களோ, கட்சி நிர்வாகிகளோ தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சிகளின் விதிகளின்படி, அடிப்படை நிர்வாகிகள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக் கூடாது. பேச்சுவார்த்தைக்கு நான் தயார். இன்றைய சூழலில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லை. அதிமுகவில் இருந்தும், அதிமுகவின் தொண்டர்களிடம் இருந்தும் என்னை ஓரங்கட்ட முடியாது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் யாரையும் குறிப்பிட்டு நான் நோகடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கும் மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்கும் வருகை தரவுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. "எங்களின் ஒற்றை தலைமையே" வருக வருக எனவும் புரட்சி தலைவரின் வழியில் கழகம்! புரட்சி தலைவியின் வழியில் கழகம்! தற்போது "எடப்பாடியார் வழியில் கழகம்" எங்களின் தலைமையே வருக என வசனங்களுடன் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகைகளால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்சியில் ஒற்றை தலைமை என்ற பிரச்னை ஓடிக்கொண்டிருக்கும் போது இந்த வசனங்கள் கட்சியில் பெரும் பிரச்னைகளை உருவாக்கும் என கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.