பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே இன்று சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது திமுகவினர் கடும் ஆவேசமடைந்துள்ள நிலையில், இன்று காலை 9 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவசரமாக சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதவ் குறித்து விளக்கம் அளிக்கிறாரா திருமா ?
ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து திமுக கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வருவதால், விசிக நிர்வாகிகளே அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட வார்த்தைகள் மூலம் திமுகவினரை சூடேற்றியிருக்கும் ஆதவ் அர்ஜூனா குறித்து இன்றைய முதல்வருடான சந்திப்பில் திருமா விளக்கம் அளிப்பார் என்றும், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்பதையும் தெரிவிப்பார் எனவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது