அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்திற்கு பலரும் வரவேற்பு அளித்த நிலையில், சிலர் சமூகவலைதளங்களில் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். அர்ச்சகர் நியமனத்தில் சமூகநீதியை பாழ்படுத்தும் வகையில் தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.


இந்த நிலையில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம். சமூகநீதியை விரும்பாத சுப்பிரமணியன் சுவாமி போன்றோருக்கு இந்த திட்டம் எரிச்சலை கொடுக்கிறது. மனிதன் நிலவில் கால்வைத்தாலும் கருவறைக்குள் கால் வைக்கமுடியாது என்ற நிலை நீடித்து வந்தது. அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் அகில இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த நடப்பு தொடரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மதம் மாறிய ஆதிதிராவிட கிருத்துவர்கள் பிசி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் ஆதிதிராவிடர் பட்டியலில் இணைக்க வலியுறுத்த வேண்டும். பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். கிராமங்களில் காலனி என்றும் சேரி என்றும் அடையாளப் படுத்தப்படுகிறது இவற்றை மாற்றி அமைக்க வேண்டும். கிராமங்களில் உள்ள தெருக்களில் சாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும். பட்டியல் வகுப்பினருக்கான துணை திட்டத்திற்கான சிறப்பு நிதியாக ஆண்டிற்கு ரூ.15,000 கோடி ஒதுக்கப் படுகிறது. அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி முறையாக செயல்படுத்த வேண்டும்” என்று கூறினார்.




அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது குறித்த விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்


”பேரவைத் தலைவரே, அறநிலையத் துறை அமைச்சர், ஒரு விளக்கத்தை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். நம்மை ஆளாக்கிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம். பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாருடைய நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக  கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தார்கள். ஆனால், அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி ஆணைகளை நாம் வழங்கியிருக்கிறோம்.


ஆனால், சிலர் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், இங்கேகூட நம்முடைய  அமைச்சர் சொல்கிறபோது. 'ஊடகத்திலே' என்று சொன்னார்கள். ஊடகத் துறையினரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொண்டு, சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே சிலர் திட்டமிட்டு,  சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொல்வார்களென்று சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும். அதிலே எந்தவிதமான சந்தேகமும்பட வேண்டிய அவசியமில்லை. ஆகவே, வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலே சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை மாத்திரம் நான் தங்கள் மூலமாக இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றார்


Swag Paati | வாரே வா தோழி வயசான தோழி.. இங்கிலீஷில் அசத்தும் சாலையோர ஸ்வாக் பாட்டி..! (வைரலான வீடியோ)