இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷான் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். கே.எஸ்.ஷானை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கொலை செய்துவிட்டதாக எஸ்.டி.பி.ஐ தலைவர் எம்.கே. ஃபைசி குற்றம் சாட்டினார். இந்நிலையில், பா.ஜ.கவின் ஒபிசி மோர்ச்சா செயலாளர் ரஞ்சித் சீனிவாசனை ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாஜக மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இரண்டு பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கூட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. அரசியல் கொலைகளை கண்டித்துள்ள அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்துள்ளார். நேற்று மாலை, தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ். ஷான் மீது காரில் வந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அது விபத்து இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






கொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இரவு உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் நடத்தியுள்ளதாக எஸ்டிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த கொலை சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்திற்குள்ளேயே அடுத்த அரசியல் கொலை நடைபெற்றது கேரள மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டி கொன்றுள்ளனர். கே.எஸ் ஷான் இறந்த அடுத்த நாளே பா.ஜ.க தலைவர் ரஞ்சித் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இது பழிவாங்கும் நோக்கத்தினால் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.






இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், "இத்தகைய கொடூரமான, மனிதாபிமானமற்ற வன்முறைச் செயல்கள் மாநிலத்திற்கு ஆபத்தானவை. இதுபோன்ற கொலைகாரக் குழுக்களையும் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையையும் கண்டறிந்து தனிமைப்படுத்த அனைத்து மக்களும் தயாராக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.