தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நிலுவையில் உள்ள 10 முக்கிய மசோதாக்களுக்கு மாநில ஆளுநரிடம் அனுமதி கோரி தெலுங்கானா அரசு அதிகாரிகள் ரிட் மனு தாக்கல் செய்தனர்.


 

தெலுங்கானா அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி  தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக  உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை  தாக்கல் செய்துள்ளார். அதில்,  மாநில அரசு தொடர்பான மசோதாக்கள் ராஜ்பவனில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாகவும், ஆளுநரால் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


செப்டம்பர் 2022 முதல் சட்டசபை  மூலம் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள் ராஜ்பவனில் தேங்கிக் கிடப்பதால், ஆளும் கட்சியினர் சமீபத்தில் நெருக்கடியை சந்தித்தனர்.


2023-24 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் உத்தரவு கோரி ஜனவரி மாதம் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு முறையிட்டது குறிப்பிடத்தக்கது. 




மாநிலங்களின் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவின் ஒப்புதலை தாமதப்படுத்தும் ஆளுநரின் செயல் மாநில அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது. இந்த மனு மார்ச் 3ஆம் தேதி அதாவது இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


தெலுங்கானா ஆளுநருக்கும், கே.சி.ஆர் தலைமையிலான அரசுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த விரிசல் இந்த மனுவால் வலுத்துள்ளது.


அரசாங்கம் தனது மனுவில் அசாமாபாத் தொழில்துறை பகுதி குத்தகைகளை நிறுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் திருத்த மசோதா 2022, தெலுங்கானா முனிசிபல் சட்டங்கள் திருத்த மசோதா 2022, தெலுங்கானா பொது வேலைவாய்ப்பு - மேற்பார்வையின் வயதை ஒழுங்குபடுத்துதல் திருத்த மசோதாவின் நகல்களை இணைத்துள்ளது. 


மேலும், வனவியல் பல்கலைக்கழகம் தெலுங்கானா மசோதா 2022, தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா 2022, தெலுங்கானா மோட்டார் வாகனங்கள் வரி திருத்த மசோதா 2022, தெலுங்கானா மாநில தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுதல் உள்ளிட்ட மசோதாக்கள் ஆகியவற்றை அரசு குறிப்பிட்டுளது.


பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலை திருத்த மசோதா 2023, தெலுங்கானா பஞ்சாயத்து ராஜ் திருத்த மசோதா 2023 மற்றும் தெலுங்கானா நகராட்சிகள் திருத்த மசோதா 2023 உள்ளிட்டவையும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.