நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்ததை முன்னிட்டு மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பட்டாசு வெடித்து, நூதன முறையில் மண்டியிட்டு சென்று பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் கட்சி வளர்ச்சியடைய வேண்டுதலில் ஈடுபட்டனர். தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் இன்று தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்துள்ளார்.




இந்த அறிவிப்பை தொடர்ந்து இதனை அவரது ரசிகர்கள் மிக பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026 -ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார். நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை இன்று அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகம் அடைந்து பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் தாரை தப்பட்டை, ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழக வெற்றி கழகம் வாழ்க, டாக்டர் விஜய் வாழ்க, வருங்கால தமிழக முதல்வர் வாழ்க என்று முழக்கமிட்டவாறு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 




பின்னர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகளுடன், காக்கி சீருடைகளையும் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர். தொடர்ந்து, செருப்பு தைக்கும் தொழிலாளிகள் பூ வியாபாரிகளுக்கு வேட்டிகளை வழங்கினர். விஜய் ரசிகர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வண்டிக்கார தெரு பிரசன்ன மாரியம்மன் ஆலயத்திற்கு வந்த விஜய் ரசிகர்கள் விஜய் படத்திற்கு சூடம் காண்பித்து சிதறு தேங்காய் உடைத்து கோயில் உள்ளே மண்டியிட்டு வந்து தங்களின் கட்சி வளர்ச்சி அடையவும், நடிகர் விஜய் வருங்கால தமிழக முதல்வராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். பின்னர் தந்தை பெரியார், காந்தி, காமராஜர், உள்ளிட்ட தலைவர்களுக்கு பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.




இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடிகர் விஜயின் அறிவிப்பை தொடர்ந்து அதனை கொண்டாடும் வகையில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் தளபதி தினேஷ், மாவட்ட தொண்டரணி து.செயலாளர் நண்பன் அரவிந்த், சீர்காழி நகர தலைவர் ராகுல், சீர்காழி ஒன்றிய தலைவர் கமல், மற்றும் இயக்க நிர்வாகிகள், சீர்காழி சட்டமன்ற தொகுதி சார்பாக நிர்வாகிகள், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.