திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து பெரும் வைரலாகி வருகிறது. அந்த தருணத்தில் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளப்பட்டது, ஆனால் நாட்களாக எதிர்க்கட்சிகளும் புகுந்து கருத்தின் மீது சற்று தீயை பற்றவைத்துவிட்டனர் என்றே சொல்லலாம். இந்நிலையில், தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் கருத்தும் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த சலசலப்பின் போக்கை சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.
ஆரம்பித்து வைத்த ரஜினி
அமைச்சர் எ.வ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தகம் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "ஒரு வகுப்பறையில் டீச்சருக்கு புதிய மாணவர்களை பற்றி பிரச்னை இல்லை. பழைய மாணவர்கள் தான் சிரமமானவர்கள். அந்த வகையில் இங்கு நிறைய சீனியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஃபெயில் ஆகிப்போனவர்கள் இல்லை. ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள். அவர்களில் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல் விட்டி ஆட்டியவர். அத்தகைய சீனியர்களை சமாளிப்பது என்பது மிக கடினம் என பேசியிருந்தார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு சிரிப்பலையில் மூழ்கினர்.
துரைமுருகன் அட்டாக்
இதையடுத்து, நடிகர் ரஜினிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் துரைமுருகன் "மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து சாகிற நிலைமையில் இருப்பவர்கள். நடிப்பவர்களால் இளைஞர்கள் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்" என்றார்.
மீண்டும் ரஜினி:
அதில், அமைச்சர் துரைமுருகனும் நானும் நன்பர்கள் தான் அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என ரஜினி கூறினார்.
மீண்டும் துரைமுருகன்
"ரஜினிகாந்த் சொன்னதை தான் நானும் சொல்கிறேன் எங்களுடைய நட்பு தொடரும். எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்தவேண்டாம். நாங்கள் எப்பொழுதும் போல் நண்பர்களாகவே இருப்போம். எங்கள் நட்பு தொடரும்" என துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிலையில், இத்தோடு முடிந்தது என நினைத்தால், எதிர்க்கட்சிகள் ஊதி பெரிதாக்கி விட்டனர் என்றே சொல்லலாம்.
அப்பாவு அட்டாக்
இந்நிலையில், இதுகுறித்தான சர்ச்சை பேச்சில் பேரவைத் தலைவர் அப்பாவும் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது “ ரஜினிகாந்த் வயதானவர் என்றாலும் இளமையாக நடித்தால் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் கருத்துகளை சொல்லி கொண்டே இருக்க வேண்டும், வயதாக வயதாக பழுத்த பழம் போல் கலைஞர் போன்று அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த தருணத்தில் ரஜினியை , அப்பாவு அட்டாக் செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்நிலையில் மீண்டும் இந்த கருத்து விவாதம் உருவெடுக்கிறதா என்றும் கருத்து எழுந்துள்ளது.