தஞ்சாவூர்: வரும் 7ம் தேதி தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா நடக்கிறது. இந்த திருமண விழா ஒரு புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடும் விழாவாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் சந்தித்துப் பேசலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு நான்கு அணிகளாக உடைந்திருந்த அ.தி.மு.க.வும், இரட்டை இலையும், தலைமைக்கழக அலுவலகமும் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தால் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்த வழிவகை செய்தது. தேர்தல் தோல்விக்கு பின் ஒற்றைத் தலைமை என்ற முழக்கத்தால் அதிமுக, கட்சி சின்னம், தலைமை அலுவலகம் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று விட்டது.


பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிகம் பேர் அவரிடம் உள்ளனர்.


ஓ.பன்னீர்செல்வம் பக்கம் குறிப்பிட்ட சிலர் தான் உள்ளனர். ஆனாலும் அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டு வர நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ஓ..பன்னீர்செல்வம். தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திலும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்திலும் மீண்டும் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி பிரிந்து கிடக்கிற அ.தி.மு.க.வை ஒன்று, சேர்க்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக மீண்டும் தர்ம யுத்தத்தில் இறங்குவாரா? அல்லது புதிய வலுவான கூட்டணியை சேர்ப்பாரா என்று தமிழக அரசியல் களம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. 




எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் முன்பு திட்டியதை,  மேடைக்கு மேடையை விளாசியதையும் மறந்து சில வாரங்களுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு பற்றி ஜே.சி.டி. பிரபாகர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.வில் பிரிந்து கிடக்கிற அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை, ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசி உள்ளனர். அடுத்தகட்டமாக சசிகலாவையும் சந்தித்து பேசுவார் என்று திரியை பற்றவைத்து அரசியல் வெடியை தூக்கி வீசினார்.


சசிகலா கடந்த சில நாட்களாக வெளியூர் பயணம் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கொளுத்தும் வெயில் சசிகலாவிற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் அவர் சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மேலும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலாவை ஜூன் 7-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவார் என்று ஒரு தகவல் உறுதிப்படுத்துகிறது. 


முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் சண்முக பிரபு- யாழினி திருமண விழா வரும் 7-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். இதில் சசிகலாவும் பங்கேற்க உள்ளார். அப்போது அவர்கள் இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தஞ்சாவூர் கோட்டையில் தனது பலத்தை காட்ட தனது மகன் திருமண விழா நிச்சயம் கைக் கொடுக்கும் என்று வைத்திலிங்கம் எதிர்பார்க்கிறார். அதனால் நிச்சயம் சசிகலாவை திருமணத்திற்கு வரவழைத்து விடுவார். அங்கு ஓ.பன்னீர்செல்வம் – சசிகலா சந்திப்பும் முக்கிய பேச்சுவார்த்தையும் நடக்கும். இந்த சந்திப்பு ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்.


ஒரத்தநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி மாநாடு போட்டு வைத்திலிங்கத்தை வறுத்தெடுத்தார். தன்னுடைய கோட்டை என்று வர்ணிக்கப்படும் ஒரத்தநாட்டில் இப்படி ஒரு மாநாடு நடந்ததும், எடப்பாடி பழனிசாமி தன்னை பற்றி பேசியதற்கும் பதிலடியும் கொடுத்து இருந்தார் வைத்திலிங்கம். தனது மகன் திருமண விழாவில் சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேசிய பின்னர் அதே ஒரத்தநாட்டில் ஒரு மாபெரும் மாநாடு நடத்தி ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் மூவரை மேடையேற்றி எடப்பாடியாருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கவும் வைத்திலிங்கம் தயாராகிறார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.