தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று பா.ஜ.க.வினருக்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, 


போலி ஆணையம்:


"சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், பா.ஜ.க. பொருளாதார பிரிவின் மாநில செயலாளர் நண்பர் துரைப்பாண்டியன் கோபால் சாமி மற்றும் சில நண்பர்களுடன் என் அலுவலகம் வந்திருந்தார். மத்திய அரசின் சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்ற ஆணையத்தின் (MSME Promotion Council) கூட்டத்திற்கு வந்ததாக தெரிவித்தனர். மத்திய அர‌சி‌ன் அங்கீகாரம் பெற்ற அப்படி ஒரு ஆணையம்  இருப்பதாக தெரியவில்லையே என நான் கூறினேன்.  


அப்போதே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் அந்த அமைப்பு எ‌ப்படி செயல்படுகிறது என கண்காணித்து வந்த நிலையில், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் MSMEPC பாண்டிச்சேரி மாநில தலைவராக தன்னை நியமனம் செய்ய சிலர் அணுகினார்கள் எ‌ன்று‌ம், அதற்கு ஒரு பெரும் தொகை கேட்பதாகவும் கூறினார்.  அப்படி ஒரு ஆணையமே மத்திய அரசில் இ‌ல்லை என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் நண்பர். 


50 லட்சம் மோசடி:


கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று OBC  அணியின் மாநில செயலாளர் எஸ்.வி.பழனிசாமி என்னை தொடர்பு கொண்டு, சேலத்தில் இந்த ஆணையத்தின் நிகழ்ச்சி நடக்கப் போவதாக தெரிவித்தார். இந்த தொல்லை நம்மை  விட மறுக்கிறதே என எண்ணிக் கொண்டே, முதலில் நான் குறிப்பிட்ட நண்பர்கள் துரைப்பாண்டியன் மற்றும் கோபால்சாமி தொடர்பு கொண்டு பேசினேன்.  ஏற்கனவே கோபால்சாமி இந்த ஆணையத்தின் 'தேசிய தலைவர்' என்று தன்னை சொல்லிக்  கொள்கிற முத்துராமன் என்ற நபரிடம் தமிழக தலைவர் பதவிக்கு ரூபாய் 50 லட்சம் கொடுத்து, தலைவர் பதவியும் வரவில்லை,  கொடுத்த பணமும் வரவில்லை என்று கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்தேன். 


இதுகுறி்த்து மேலும் விசாரிக்கையில்,  முத்துராமன் எனும் நபர் மேலு‌ம் சிலருடன் சேர்ந்து ம‌த்‌திய அர‌சி‌ன் சின்னத்தை தவறாக பயன்படுத்தி வந்ததோடு,  பிரதமருடன் இருப்பது போன்ற போலி புகைப்படங்களை வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்ததையும், பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலரையும், பொது மக்களில் பலரையும் பதவி கொடுப்பதாக ஏமாற்றி பண‌ம் வசூல் செய்தது குறித்து அறிந்தேன். இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசித்தேன். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு என்னை காவல் துறையில் புகாரளித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். 


அதிரடி கைது:


அதற்கான சில முக்கிய ஆதாரங்களை தமிழக காவல்துறை தலைவருக்கு அனுப்பி போலி ம‌ற்று‌ம் மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.  கோபால்சாமியை உடனடியாக சேலத்தில் புகார் அளிக்க செய்தேன். மேலும், சில வருடங்களுக்கு முன் இதே போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்ட விஜயகுமார் என்ற நபரை கைது செய்ய உறுதுணையாக இருந்த சேலம் மாவட்ட துணைத்தலைவர் 'ஸ்பீடு' செல்வராஜை தொடர்பு கொண்டு கண்காணிக்க சொன்னதன் அடிப்படையில், காவ‌ல்துறை‌யின‌ரிடம் ஒருங்கிணைந்து நம் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இ‌ந்த நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை  உறுதிப்படுத்தியதையடுத்து, திங்கள்கிழமையன்று  முத்துராமன் எ‌ன்ற நபரும் அவருக்கு துணையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.


மேலும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக தொழில் அணி தலைவர் கோவர்த்தனன் மோசடி நபர்  முத்துராமன் குறித்து மதுரை புறநகர் காவல் துறையில் புகார் அளித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. இது குறித்து கோவர்த்தனன்  தொடர்புடைய அமைச்சர் அலுவலகத்தை திங்களன்று தொடர்பு கொண்டு, இந்த மோசடி பேர்வழிகள் குறித்து விளக்கி,  அமைச்சகத்தின் மூலமும் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்து கொண்டிருக்கிறார்.


டி.ஜி.பி.க்கு நன்றி:


பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.  இந்த விவகாரத்தில் எனக்கு  உறுதுணையாக இருந்த திருப்பூர் துரைப்பாண்டியன்,  சேலம் கோபால்சாமி, சேலம் Selvaraj Sn  மாநில தொழில் அணி தலைவர்  கோவர்த்தனன், மாநில OBC அணி செயலாளர், கோவை பழனிசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.  


குறிப்பாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுங்கள் என்று பணித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவி்த்துக் கொள்கிறேன். இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் பாஜக வினர் விழிப்புடன் இருப்பதுடன், சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க பாடுபடும்படி கேட்டுக் கொள்கிறேன்."


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.