TN BJP Leader: தமிழக பாஜகவின் புதிய தலைவர் - திருத்தமா? அண்ணாமலைக்கு வருத்தம்? வானதி Vs நிர்மலா?
TN BJP Leader: தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் யார்? என்பது இன்று தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN BJP Leader: தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு, இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் யார்?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. தற்போதே அதற்கான பணிகளில் மாநிலத்தில் ஆளும் திமுக தொடங்கி, மத்தியில் ஆளும் பாஜக வரையிலான அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜக, வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான முக்கிய நடவடிக்கையாக அடுத்த மாநில தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதற்கான தேர்தலை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக பாஜகவை வழிநடத்த உள்ள, தலைவர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனை உறுதி செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக, பாஜக மூத்த தலைவர் அமித் ஷா சென்னையில் முகாமிட்டுள்ளார். நாளை தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு, நாளை மறுநாள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயினாருக்காக திருத்தமா?
தேர்தல் தொடர்பான அறிவிப்பில், தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கட்சியில் பணியாற்றி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தலைவராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும், நயினார் நாகேந்திரன் அக்கட்சியில் சேர்ந்து 8 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. இதனால், அவரை தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து நீக்கவே இந்த விதி வகுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். இருப்பினும், பாஜக தேசிய தலைமை விரும்பினால் கடைசி நேரத்தில் விதிகளை தளர்த்தி, நயினார் நாகேந்திரன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மாவட்ட தலைவர்களில் பெரும்பாலானோர் நயினாருக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் ஆதரவு?
நயினார் நாகேந்திரனுக்கு கட்சி பிரமுகர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், தென்காசி மாவட்ட பாஜக தலைவரான ஆனந்தன் அய்யாசாமியை தலைவராக நியமிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜகவின் ஸ்டார்ட்அப் செல் பிரிவின் தலைவராகவும் ஆனந்தன் அய்யாசாமி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் யாத்திரையின் தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளராகவும் ஆனந்த அய்யாசாமி செயல்பட்டார். கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்க்க அண்ணாமலையை பயன்படுத்தியது போல, தென்மாவட்டங்களில் கட்சியை வளர்க்க ஆனந்தன் அய்யாசாமியை பயன்படுத்திக்கொள்ள பாஜக விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
வானதி Vs நிர்மலா?
யாருமே எதிர்பாராத விதமான தடலடியான அறிவிப்புகளை வெளியிடுவதில் பாஜக கைதேர்ந்தது. தமிழக பாஜக தலைவர் தொடர்பான அறிவிப்பிலும் அத்தகைய ட்விஸ்ட் இடம்பெறலாமென என எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகாலம் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியும் அந்த சந்தேகத்தை வலுவாக்குகிறது. அந்த வகையில் பெண்களை முன்னிலைப்படுத்த விரும்பும் பாஜக, வானதி ஸ்ரீனிவாசன் அல்லது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கூட மாநில தலைவராக அறிவிக்கலாம் என்ற யூகம் நிலவுகிறது. இந்த இரண்டு பேருமே தமிழக மக்களிடையே நன்கு பறிச்சயமானவர்கள் மற்றும் ஆதரவு பெற்றவர்களகாவும் உள்ளனர். வானதி ஸ்ரீனிவாசன் தீவிரமாக களமாடக்கூறியவர். அதேநேரம், நிர்மலா சீதாராமன் தமிழக அரசியல் களத்தை நன்கு அறிந்தவர், அதிமுக உடனான கூட்டணி விவகாரத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறார். செங்கோட்டையனை கூட அண்மையில் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலை இவர்களில் ஒருவரை முன்னிலைப்படுத்தி எதிர்கொள்ளவும், பாஜக முன்வரலாம்.
அண்ணாமலைக்கு வருத்தம்?
தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை என அண்ணாமலை அறிவித்தாலும், கட்சியின் முடிவு அவருக்கு பெரும் வேதனை அளித்துள்ளதாகவே கூறப்படுகிறது. அவர்கள் சொன்னதற்காக அரசு வேலையை விட்டு வந்த தனக்கு, தலைவர் பதவி நீட்டிக்கப்படும் என்றும் அவர் மிகவும் நம்பியதாக தெரிகிறது. இதற்காக கடைசி நேரம் வரை அவர் முயன்றதகாவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவரது கணக்குகளும், கணிப்புகளும் வீணாய்போனதே மிச்சம். முன்பு தனக்கு கிடைந்த வந்த மரியாதை கூட, கடைசியாக பிரதமர் மோடி ராமேஷ்வரம் வந்தபோது தனக்கு கிடைக்கவில்லை என்றும் நெருங்கிய வட்டாரத்திடம் அண்ணாமலை புலம்பி வருகிறாராம். அண்ணாமலை தான் தமிழக பாஜக, தமிழக பாஜக தான் அண்ணாமலை என லாபி செய்தது வந்தது எல்லாமே வீணாய் போனதாகவும் அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.





















