"அப்பா எல்லாம் வீண் விளம்பரம்" கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு துரும்பைக் கூட அள்ளிப்போடாத மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரத்திற்காக அப்பா, அண்ணன் என்று நாடகம் போடுவதால் என்ன பலன்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் குற்றங்கள் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் இணைந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
கூட்டுப்பாலியல் வன்கொடுமை:
கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.
ஒன்றுமே செய்யவில்லை:
ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
வீண் விளம்பரத்திற்காக அப்பா, அண்ணன்:
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவாரா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள் திமுக அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
திமுக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வியூகம் வகுத்து வரும் நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.