தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். போலி பாஸ்போர்ட் வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “ கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 28ந் தேதி 41 வயதான இலங்கை குடிமகன் ஒருவர் போலி ஆவணங்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட பாஸ்போர்ட் மூலமாக இலங்கைக்கு விமானம் மூலமாக செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு மதுரையில் சட்டவிரோதமாக பாஸ்போர்ட் கிடைத்தது தெரியவந்தது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி 61 வயதான நபர் போலி பாஸ்போர்ட் மூலமாக மதுரையில் இருந்து துபாய் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் 27.9.2019ம் ஆண்டு ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலி அடையாளத்தை காட்டி இலங்கை அகதிகளால் பாஸ்பார்ட் பெறப்பட்டதாகவும், இந்த பாஸ்போர்ட்கள் மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்டே வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டபோது அவனியாபுரம் காவல் ஆய்வாளராக இளவரசு, உளவுத்துறை காவல் ஆய்வாளராக தர்மலிங்கம், உதவி ஆணையராக சிவகுமார், மதுரை காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் இருந்தனர். பாஸ்போர்ட் வழங்கலில் காவல்துறையினர் விசாரணையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையரின் பங்கு மிகவும் முக்கியமானது.
இந்த வழக்கின் சி.ஐ.டி. க்யூ பிராஞ்ச் போலீசார் எப்.ஐ.ஆரை மாற்றவில்லை. ஒருவேளை இதற்கு முட்டுக்கட்டை இருக்கலாம். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அரசாங்கம் இந்த வழக்கு தொடர்பாக 175 பேரை விசாரித்து, 22 பேர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு, 3 காவல் அதிகாரிகள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதால் இந்த வழக்கிற்கு சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் சி.ஐ.டி. போலீசார் 3 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை விசாரிக்கும் உளவுத்துறை ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி அலுவலகத்தில் இருந்து தொடர்புடைய துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர்களை குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதற்காக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈஸ்வரமூர்த்தியின் விசாரணையில் டேவிட்சன் தேவாசிர்வாதத்தையும் விசாரிக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் கடிதம் அனுப்பியுள்ளார். உள்துறை செயலாளர் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு இந்த வழக்க தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பினார். ஆனால், அதன்பின்பு இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
பாஸ்போர்ட் மற்றும் தபால்துறையில் உள்ளவர்கள் தங்கள் ஒப்புதலை வழங்கிய நிலையில், மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு டேவிட்சன் தேவாசிர்வாதம் ஒப்புதல் வழங்காததால் வழககு தேங்கியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களால் வழக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது தெளிவாகிறது.
டேவிட்சன் தேவாசிர்வாதத்தின் தாமதத்தால் இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் உண்டு. தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை அவர் மீறியுள்ளார். மறுமுனையில் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. போலி பாஸ்போர்ட் வழக்குகள் மதுரை காவல்நிலையத்தைச் சுற்றியே இருப்பதை சாதாரணமாக கருத முடியாது.
அப்போது மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்தவரின் தொடர்பு இல்லாமல் கீழே உள்ள அதிகாரிகள் இதைச்செய்திருக்க முடியாது. தி.மு.க. அரசும், உள்துறை செயலாளரும் கறைபடிந்த அதிகாரியிடம் மாநில உளவுத்துறையை ஒப்படைத்துள்ளனர். மதுரையின் காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் இருந்தபோது 200க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நீங்கள் உடனே தலையீட்டு அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும், இந்த வழக்கில் குறுக்கீடு இல்லாமல் இருக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேசிய புலனாய்வு முகமை அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தவும்”
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்