”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் இலட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர்

Continues below advertisement

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன என்றும் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கருத்து பதிவிட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழக சமூக நலம், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Continues below advertisement

கீதா ஜீவன் அறிக்கையில் சொன்னது என்ன ?

அதில்,பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது என்றும் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதால்தான் தமிழ்நாட்டில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்கிறவர்களாகவும், வேலைக்குச் செல்பவர்களாகவும், சுயமானவர்களாகவும் உள்ளனர் எனவும் கீதா ஜீவன் தெரிவித்துள்ளர்  

பெண்களை காவல்துறையில் இணைத்தவர் கலைஞர்

மேலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 1973 ஆம் ஆண்டுப் பெண்களை முதன்முதலாகக் காவல்துறையில் இணைத்தார் எனவும்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகத் திரு.மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாகக் காவல்நிலையங்களைத் திறந்துவருகிறார் எனவும் தனது அறிக்கையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தேசிய குற்ற ஆவண காப்பக ஆவணத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் இலட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் கீதா ஜீவன், பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைத் தடுப்பதை அரசின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயலாற்றுகிறது திராவிட மாடல் அரசு என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது எனவும் திட்டவட்டமாக அமைச்சர் கீதா ஜீவான் தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில்,  மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது. அதனால்தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Continues below advertisement