AIADMK: அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்.! இபிஎஸ் முதலமைச்சர் ஆவார்.. அடித்துச் சொல்லும் தம்பிதுரை
தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குழப்பமான கட்டத்தில் உள்ள நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்று தம்பிதுரை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் இரண்டு முறை கடிதம் கொடுத்து, அவர் இன்னும் தவெகவிற்கு அழைப்பு விடுக்காமல் உள்ளார். இதனிடையே, திமுக-அதமுக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு பரபரப்புகள் அரங்கேறிவரும் நிலையில், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறி பரபரப்பை மேலும் கூட்டியுள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.
தம்பிதுரை கூறியது என்ன.?
சென்னையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என்று கூறினார்.
மேலும், மக்களுக்கான நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமி தருவார் என்றும், ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். அதோடு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்றும், அவரது தலைமையில் ஆட்சி அமையும் என்றும் உறுதிபடக் கூறினார்.
தொடர்ந்து, கடவுளின் அருளால் நல்லதே நடக்கும் என்று கூறிய அவர், திமுக-அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, அது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதோடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறதா என்ற கேள்விக்கும் பதில் கூற மறுத்துவிட்டார்.
திமுக-அதிமுக கூட்டணி பேச்சுக்கள்
தமிழ்நாடு அரசியலில் ஒரு பக்கம் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறம் திமுக-அதிமுக கூட்டணி அமைவதாக நேற்று வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டமும், அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டமும் நடைபெற்றதால், பரபரப்பு கூடுதலானது.
இந்நிலையில், திமுக கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சியின் நன்மை கருதி முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும், அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளுக்கு அனைத்து எம்எல்ஏ-க்களும் கட்டுப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், வரும் 10-ம் தேதி வரை சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிட்டார். இதனால், அதிமுக உடன் திமுக இணைய உள்ளதாக என்ற சந்தேகம் வலுவடைந்தது.
இதனிடையே, புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை நடத்தினார். அது குறித்த விவரம் ஏதும் வெளியாகாத நிலையில், தம்பிதுரை தற்போது கூறியுள்ள தகவல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவர் பேசியுள்ளதும், திமுக-அதிமுக கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாகவே உள்ளது.
மறுபுறம், பெரும்பான்மையை பெற தவெக தலைவர் விஜய் இறுதிகட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே சிபிஐ-யிடம் ஆதரவு கேட்ட நிலையில், அவர்களது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. விசிகவோ, சிபிஐ-யின் முடிவு தெரிந்துபின் தங்கள் முடிவை எடுப்பதாக கூறியுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















