பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு வெளியானது. அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகிய இருவரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்ப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் வகித்த பொறுப்புகள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட, மனோ தங்கராஜூக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செ.பாலாஜிக்கு வழக்கு ; பொன்முடிக்கு நாக்கு

ஜாமீன் வேண்டுமா? இல்லை அமைச்சர் பதவி வேண்டுமா? என்று செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையால் அரண்டுபோய் அமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்திருக்கிறார் செ.பாலாஜி. தன் வாயால் கெட்ட கதைதான் பொன்முடிக்கு. விலைமாவிடம் வாடிக்கையாளர் பேசுவது போன்று நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து, இந்து மக்களின் மனதையும், பெண்களையும் கொச்சைப்படுத்திய பொன்முடிக்கு அவரது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பாஜகவினரும் மேடைப் போட்டு திமுக அரசை திட்டுவதற்கு பொன்முடி பேசிய பேச்சு நல்ல வாய்ப்பாக அமைந்துப்போனது. அதனால், பொன்முடி தமிழகம் முழுவதும் நார்நாராக கிழித்தெறியப்பட்டார். அவரை இப்படியே அமைச்சராக வைத்திருந்தால் கட்சிக்குதான் கெட்ட பெயர் என்பதை உணர்ந்து, தயவு தாட்சண்யமின்றி அவரையும் நீக்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கவுண்டர் டூ கவுண்டர்

செந்தில்பாலாஜியும், பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் வகித்துள்ள துறைகள் பிற அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி வகித்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அதே சமுதாயத்தை சேர்ந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் முத்துச்சாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கொங்கு வேளாள கவுண்டர் சமுதாய மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருவதாலும், கடந்த தேர்தலில் திமுகவிற்கு கொங்கு பகுதியில் பெரிய வெற்றி கிடைக்காத காரணத்தாலும் இந்த முறை செந்தில்பாலாஜியை வைத்து வரும் தேர்தலில் வெற்றியை ருசிக்க திமுக திட்டமிட்டது. ஆனால், வழக்கில் சிக்கி செ.பாலாஜி சின்னாப்பின்னமாகி வருவதால், அந்த சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வாக்குகளை கவரும் விதமாக முத்துச்சாமிக்கே மதுவிலக்கு துறை கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பதால், மீண்டும் கொங்கு வேளாள கவுண்டர் சமுதாய மக்கள் அதிமுகவை நோக்கி செல்வதை தடுக்கும் உத்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.

வன்னியருக்கு முக்கியத்துவம்

அதே நேரத்தில் வட மாவட்டத்தில் அதிக அளவிலும் செல்வாக்கு மிக்க சமூகமாகவும் திகழும் வன்னியர் சமுதாயத்திற்கும் திமுக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதை காட்டுவதற்காக, செந்தில்பாலாஜியிடம் இருந்த இன்னொரு முக்கியத்துறையான மின்சாரத் துறையை, போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் திமுவிற்கு எதிராக அறிக்கைக் கொடுக்கும்போதெல்லாம், அவர்களுக்கு அதே சமூகத்தை சேர்ந்த சிவசங்கரே சமீபகாலமாக பதிலடியும், பதிலறிக்கையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில், வட மாவட்ட வன்னியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சிவசங்கருக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி மாதிரி பல துறைகளுக்கு அமைச்சராகும் ராஜகண்ணப்பன்

வழக்கமாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் பல்வேறு துறைகளுக்கு செயலாளராக, ஆணையர்களாக பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அவர்கள்தான் கொடுக்கும் துறைகளையெல்லாம் கவனிப்பார்கள். ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பனும் தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாதிரி, மாறி, மாறி வரும் பொறுப்புகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார்.

அவரிடமிருந்த பால் வளத்துறைக்கு பதிலாக பொன்முடி வகித்த வனத்துறையை தற்போது ராஜ கண்ணப்பனுக்கு அளித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சி அமைந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அவரிடமிருந்து போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தரப்பட்டது. பின்னர், அவருக்கு காதி கதர் துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர், பொன்முடி வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை துறக்க நேரிட்டப்போது, அவர் வகித்த உயர்க்கல்வித்துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இப்போது, அவர் வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

யாதவர் சமுதாயத்தை சேர்ந்த ராஜகண்ணப்பன் அந்த சமூக மக்களிடம் செல்வாக்கு மிக்க நபராக இருப்பதால் அவர் மீது சர்ச்சைகள் எழுந்தாலும் அவர் அமைச்சரவையை விட்டு நீக்கப்படவில்லை. இந்நிலையில், அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையில் வனத்துறை அமைச்சராக அவரை மு.க.ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.

நாடார் சமூகத்திற்கும் கூடுதல் வாய்ப்பு

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கன்னியகுமரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற பாஜக தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த மாவட்டத்தில் தீவிரமாக செயல்படவும், தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிர்வாகிகளை தயார்ப்படுத்தும் வகையிலும் மனோ தங்கராஜூக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, ஏற்கனவே, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாடார் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்தாலும் மனோ தங்கராஜூக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டதன் மூலம், தென் மாவட்டங்களில் வரும் தேர்தலில் நாடார் சமூதாய வாக்குகளையும் அதிக அளவில் பெற திமுக திட்டம் வகுத்துள்ளது