TN Assembly: தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக உள்ளன, என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
மரியாதையை தவறவிடும் ஆளுநர் - அமைச்சர் ரகுபதி:
சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”சட்டமன்ற மரபுப்படி முதலில் தமிழ்த்தாய்
வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தேசிய கீதத்தை வாசிக்க வேண்டுமென்று சொல்கின்ற ஆளுநர் நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் உரையை முழுவதும் படிக்கின்றவரை அங்கேயே பொறுமையோடு இருந்தவர் இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம். ஆனால், அவர் மரியாதையை அவரே தவறவிடுகிறார்” என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கும் அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
”ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படும் ஆளுநர்கள்”
கேள்வி – சாவர்கர், கோட்சே குறித்து சட்டமன்றப் பேரவை தலைவர் பேசியது..
சட்ட அமைச்சர் பதில் – அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சபாநாயகரே தெரிவித்துள்ளார்.
கேள்வி – அடுத்தகட்டமாக ஆளுநர் உரை இல்லாமல், தெலுங்கானா அரசு
செயல்பட்டதுபோல...
சட்ட அமைச்சர் பதில் – தெலுங்கானா அரசு ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர், நாம் ஆளுநருக்கு மரியாதை கொடுத்து ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தில் நாம் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும், எனவே அவ்வாறு தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதன் அடிப்படையில் ஆளுநர் உரையோடு தொடங்கப்பட்டது.
கேள்வி – குடியரசு நாள் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு சுமூகமான உறவு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது, மீண்டும் இதுபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளதே...
சட்ட அமைச்சர் பதில் – சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்தோம். ஆனால் ஆளுநர்கள் எல்லாம் ரிமோட்கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார்கள். ரிமோட்டை இயக்குபவர்கள் எப்படி இயக்குகிறார்களோ அதன் அடிப்படையில் தான் இயங்குகிறார்கள். இவர்கள் சுயமாக இயங்க முடியாது.
கேள்வி – எங்கள் ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறாரே..
சட்ட அமைச்சர் பதில் – அவர்கள் ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா என்று பல இடங்களில் பல முறை இடம்பெற்றது, அதை எல்லாம் ஆளுநர்கள் வாசித்தார்கள். ஆனால் இந்த ஆளுநர் உரையை படித்து பாருங்கள், இந்த அரசு என்று தான் இருக்கும், இரண்டு மூன்று இடங்களில் மட்டும் தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பெயரே இருக்கும். அந்த அளவிற்கு எளிமையாக, விளம்பரம் இல்லாமல் நாங்கள் செய்கின்ற சாதனைகள் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையோடு, பெயருக்கு முக்கியத்துவம், விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாதனைகளுக்கு முக்கியவத்துவம் கொடுத்து இந்த ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த உரையை வாசிக்க ஆளுநருக்கு மனமில்லை.
கேள்வி - உச்சநீதிமன்றம் ஆளுநரும், முதலமைச்சரும் கலந்து பேசி முரண்களை கலைந்து, சுமூகமாக செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது குறித்து...
சட்ட அமைச்சர் பதில் – இந்த நிகழ்வை பார்த்த பிறகு, உச்சநீதிமன்றம் என்ன முடிவுக்கு வரும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் மரியாதையோடு அழைத்தோம். அந்த மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பதை உச்சநீதிமன்றம் தெரிந்து கொள்ளும். எங்கள் வழக்கறிஞர்கள் அதை எடுத்துரைப்பார்கள்.
கேள்வி – இன்றைய நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கருத்து குறித்து...
சட்ட அமைச்சர் பதில் – இன்று சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்தும் ஆளுநர் பற்றியும் எதிர்க்கட்சி தலைவர் ஏதாவது விமர்சனம் செய்தாரா. ஏன் என்றால் அவரால் முடியாது. கொத்தடிமை. விமர்சனம் செய்தால் அடுத்தநாள் அவர்களுக்கு ரைடு வரும். அதனால் பயந்து கொண்டுதான் பேட்டி கொடுக்க முடியும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் பயந்து கொண்டு பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் அடிமைகள் அதனால் அவர்கள் அப்படி தான் பேட்டி கொடுப்பார்கள். ஆளுநரின் நடவடிக்கை கண்டித்து அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பாஜக குறித்தும், ஆளுநர் குறித்தும் சொல்லமாட்டார்கள். ஆளுநர் உரையில் அரசு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறோம். அடுத்த வாரம் பட்ஜெட் வருகிறது. அதில் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை தெரிவிப்போம். நாங்கள் அதிகமாக செய்துள்ளதை ஆளுநர் உரையில் தான் எடுத்து சொல்லமுடியும்.
கேள்வி – விதி 17 தளர்த்தி தீர்மானம் கொண்டுவந்த போது அதிமுக புறக்கணித்து, வெளிநடப்பு செய்யவில்லை, சென்ற முறையோடு ஒப்படும்போது, ஏதோ மாற்றம் வந்திருக்கிறதா...
சட்ட அமைச்சர் பதில் – அவர்கள் அதை புரிந்து கொள்வதற்குள் விதி 17 திருத்தம் முடிந்துவிட்டது, அதனால் அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
கேள்வி – ஆளுநர், முதலமைச்சர் உறவு தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கு குறித்து..
சட்ட அமைச்சர் பதில் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நீங்கள் சமரமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். முதலமைச்சரும் அதற்கு தயாராக தான் இருந்தார். ஆளுநரை சென்று சந்தித்து, பேசினார். சுமூகமான உறவு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இன்றைக்கு திரும்பவும் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
கேள்வி – தமிழ்நாடு அரசிற்கும் ஆளுநருக்கும் உறவு சரியில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுவது குறித்து...
சட்ட அமைச்சர் பதில் – அவர்களுக்கு டெல்லி அன்று சாதகமாக இருந்தது. நினைத்ததை சாதித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரைக்கும், ஒன்றிய அரசிற்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால், சாதகமான சூழ்நிலை இல்லை என்றாலும்கூட, முதலமைச்சர் அவர்கள் ஆளுநரோடு அனுசரித்து செல்ல வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஆளுநர் போக விரும்பவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். தமிழகத்தில் தான் அமைதி நிலவுகின்றது, மதநல்லிணக்கம் நிலவுகின்றது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. எனவே, வெளிநாட்டிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் வருகின்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி இருக்கின்றார் என்றால், அதற்கு இங்கு நிலவுகின்ற அமைதியான சூழ்நிலை தான் காரணம்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.