அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக தற்காலிகமாக பொறுப்பு வகித்து வந்த தமிழ் மகன் உசேன் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
68 ஆண்டுகளாக அரசியல் பணியில் இருக்கும் தமிழ் மகன் உசேன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அபிமானிகள் பட்டியலில் அடிக்கடி இடம்பெறுபவர். தற்போதுதான் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றாலும் இவர் குறித்த சுவாரசியத் தகவல்கள் பல உள்ளது. எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என உறுதியாக நின்றவர்களில் தமிழ்மகன் உசேனும் ஒருவர்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிக்காலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநராக இருந்த அவர் நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு பேருந்தை ஓட்டி வந்த சமயத்தில்தான் 1972 அக்டோபர் 10 ஆம் தேதி எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட செய்தி கிடைக்கப் பெறுகிறது. அப்போது மதுரை அருகே பேருந்தை ஓட்டி வந்த தமிழ்மகன் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு இப்படிப்பட்ட ஆட்சியில் தான் அரசுப்பணியில் இருக்க விரும்பவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு தனது ஓட்டுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்கிற தீர்மானத்தில் பலரிடம் கையெழுத்து பெற்று சென்னைக்கு வண்டி ஏறியுள்ளார். எம்ஜிஆரை அவரது ராமாபுரம் இல்லத்தில் சந்தித்த உசேன் அவரிடம் அந்தத் தீர்மானத்தைக் கொடுக்கவும். உசேன் உட்பட பலர் முன்னிலையில் சத்யா ஸ்டுடியோஸில் கட்சி தொடங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது. அதிமுகவும் உதயமானது. கட்சி தொடங்குவதற்காகக் கையெழுத்திட்டவர்களில் முதன்மையானவர் தமிழ்மகன் உசேன். அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர். நியமித்த மாவட்ட அமைப்பாளர்களில் உசேனும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.
இதனிடையே அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் கடந்தாண்டு ஆகஸ்டில் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அந்தப் பதவி காலியாகவே இருந்து வந்தது. அந்தப் பொறுப்புக்கு பொன்னையன், அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன் எனப் பல பெயர்கள் கட்சி வட்டாரத்தினரிடையே அடிபட்டு வந்தது. முக்கியப் பொறுப்பு என்பதால் அவைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரா அல்லது எடப்பாடி பழனிசாமி தரப்பினரா? யாரை நியமிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அதிமுக சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுவதாக அன்வர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். மேலும் கொங்கு மண்டலத்தைச் சேராத சிறுபான்மையினர் ஒருவர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் அந்தக் கட்சியின் சிறுபான்மை பலமும் கூடும் எனக் கணிக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழ் மகன் உசேன் தற்காலிக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு வந்தார். இந்நிலையில் தான் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்