உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் அறிவிப்பு வந்த அடுத்த நாளே தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார் நடிகர் விஜய். சூப்பர் ஸ்டாராக ரஜினி விட்ட இடத்தை தளபதியாக தான் பிடித்து அரசியலில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்படத் தொடங்கியிருக்கிறார் அவர்.
அதனால்தான், நவம்பர் 20ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்திய அதே வேகத்தோடு இன்னொரு ஆலோசனை கூட்டத்தை உதயநிதி அமைச்சராக பதவியேற்கும் 14ஆம் தேதிக்கு முதல் நாளான 13ஆம் தேதி நடத்தி முடித்திருக்கிறார் விஜய். அந்த கூட்டம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். ஒரு கட்சியை போல தனது இயக்க கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும் என்றும் கிராமம்தோறும் மக்கள் இயக்கத்தின் கிளைகளை உருவாக்கி, பூத் கமிட்டிகளை அமைப்பதற்கான வேலைகளை செய்ய வேண்டும் எனவும் நடிகர் விஜய் தனது நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
கிளைகளை திறப்பது, நற்பணி செய்வது, அரசியல் கட்சியாக இயக்கத்தை வளர்ப்பது ஆகியவற்றுக்கு தேவையான பணம் தேவைகேற்ப புஷ்சி ஆனந்த் மூலம் தரப்படும் என்றும் சொல்லி தனது நிர்வாகிகளை குஷியாக்கியிருக்கிறார் நடிகர் விஜய்.
நடிகர் ரஜினி யாருக்கு, எந்த கட்சிக்கு ஆதராவாக குரல் கொடுக்கப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு கடந்த 1996 தேர்தல் முதல் கடந்த தேர்தல் வரை தொடர்ந்த நிலையில், அந்த இடத்தை பிடிப்பதற்கான முதல் முயற்சியில் இறங்கியிருக்கிறார் விஜய் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
திமுகவின் எதிர்காலம் உதயநிதி தான் என்று முடிவாகிவிட்ட நிலையில், தான் அரசியலுக்கு வரும்போது தன்னுடைய போட்டியாளராக உதயநிதிதான் இருப்பார் என்று கணித்து, இப்போதே அவருக்கு எதிராக தன்னுடைய நிர்வாகிகள் மூலம் காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய். அதனுடைய வெளிப்பாடுதான் ‘எத்தனை வாரிசுகள் அரசியலில் வந்தாலும் மக்கள் கொண்டாடும் ஒரே வாரிசு தளபதி விஜய்’ என மதுரை உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.
உதயநிதி ஸ்டாலின் தீவிரமான விஜய் ரசிகராக இருந்ததால்தான், அவர் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது ‘கில்லி’ போன்று ஒரு திரைப்படம் விஜயை வைத்து எடுக்க வேண்டும் என்று நினைத்து ‘குருவி’ திரைப்படத்தை எடுத்தார். ஆனால், அதன்பிறகு உதயநிதியும் நடிகர், அரசியல்வாதி என்று புதுபுது அவதாரம் எடுத்ததால் இருவருக்குள்ளும் இயல்பாகவே போட்டி வந்துவிட்டது.
தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீசுக்கு முன்னதாக நடக்கும் ஆடியோ லாஞ்ச் விழாக்களில் சில வருடங்களாக விஜய் அரசியல் பஞ்சுகள் பேசுவதும் அது விமர்சனங்களுக்கு உள்ளாகி பிரச்னையாக உருவெடுப்பதும் தொடர்ந்து வந்தது. அது அவருடைய படத்திற்கான பிரோம்ஷன் ஸ்டார்டர்ஜி என்று மக்களும் விமர்சர்களும் பேசினாலும் கூட, விஜய்க்கு தெரியும், தான் பேசும் ஒவ்வொரு வரியும் இன்றைகானதோ, தன்னுடைய அந்த படத்திற்கானதோ அல்ல, தன்னுடைய எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கானது என்று.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று எப்போது முடிவு செய்துவிட்டார். ரஜினி போல தன்னுடைய அரசியல் பிரவேசமும் புஷ்வானம் ஆகிவிடக்கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார். அதனால்தான், தன்னுடைய ஒவ்வொரு அடியையும் பார்த்து, கவனமாக, தேர்வுச் செய்து எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய் தன்னுடைய அரசியல எண்ட்ரிக்கு தேர்வு செய்து வைத்திருக்கும் வருடம் 2026. அந்த தேர்தலில் கட்சியை தொடங்க, இப்போதே கட்டமைப்பை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறார் அவர். ஒருவேளை, விஜய் கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தால், தன்னுடைய குரலை விஜய்க்காக ரஜினி கூட கொடுக்க நேரும். அப்படி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமா பிரபலங்கள் ஒன்றிணைந்து தங்களின் பிரதிநிதியாக விஜயை அறிவித்தால், அது ஆளுங்கட்சியான திமுகவிற்கு வரும் தேர்தலில் பெரும் தலைவலியாக இருக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போன்று, வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயை சமாளிக்க வேண்டிய நெருக்கடி திமுகவிற்கு ஏற்படும்.
விஜய் அரசியல் எண்ட்ரி கொடுத்தால் 2026 தேர்தலில் அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முடிவு செய்ததுபோல் அரசியலுக்கு வருவாரா விஜய் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி !