K.N.NEHRU : ‘அமைச்சர் KN நேரு வழக்கில் திடீர் திருப்பம்’ உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன..?
'பல வழக்குகள் மனுதாரார் மீது இருப்பதால், அவரின் உண்மைத் தன்மை குறித்தே உயர்நீதிமன்றம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது அமைச்சர் கே.என்.நேருவிற்கு சாதகமாக மாறியிருக்கிறது’

தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனம், டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுக்களை மதுரையைச் சேர்ந்த ஆதி நாராயணன் மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தனக்கு எதிரான வழக்குகள் குறித்து ஆதி நாராயணன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இன்பதுரை தரப்பில் வாதம்
இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அமலாக்கத் துறை தரப்பிலும், தங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி, அமலாக்கத் துறை சேகரித்த ஆதாரங்களை சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அவற்றை அனுப்ப வேண்டியது கட்டாயம் என்றார்.
அமலாக்கத்துறை வாதம்
அதிகாரிகள் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே பலர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பெருந்தொகை பெறப்பட்டுள்ளது தொடர்பாக வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளும் உள்ளன எனவும் அமலாக்க துறை தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார். ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், ஆரம்பகட்ட விசாரணை நடத்தவில்லை என்பதை காரணமாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை ரத்து செய்யக் கோரலாம்; அதன் அடிப்படையில் வழக்கும் ரத்து செய்யப்படலாம் என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசின் வழக்கறிஞர் பேசியது என்ன ?
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அமலாக்கத் துறை கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற காலவரம்பும் உள்ளது என்றார். வங்கி மோசடி வழக்கில் தான் இந்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மோசடி வழக்கும், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு தான் இந்த ஆதாரங்கள், தமிழக டிஜிபி-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அமலாக்க துறை கடிதத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எனவும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என யாரும் கோர முடியாது எனவும் தெரிவித்தார்.
விசாரணை துவங்கபட்டுள்ளது – என்.ஆர்.இளங்கோ
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அதிகாரப்பூர்வமில்லாத ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது என்றார். லஞ்ச ஒழிப்புத் துறை விதிகளில், புகார்கள் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழக்கில் துவங்கியுள்ள விசாரணை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் ஆவணங்களை கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. முழுமையான, முறையான விசாரணை நடத்தப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் தனி நபர்களுக்கு எந்த பங்கும் கிடையாது. முறையாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என டிஜிபி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம்சவுத்ரி தெரிவித்தார்.
மனுதாரர் மீது உயர்நீதிமன்றம் சந்தேகம்
இந்நிலையில், இந்த வழக்கை தொடர்ந்துள்ளவர்களில் ஒருவரான மதுரையை சேர்ந்த மனுதாரார் மீது உயர்நீதிமன்றம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவர் மீது ஏற்கனவே 32 வழக்குகள் இருப்பதாகவும், அதில் 18 வழக்குகள் மட்டுமே முடித்து வைக்கப்பட்டுள்ளன எனறும் தெரிவித்த பி.எஸ்.ராமன், இது தவிர அவர் மீது 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது என தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறிப்பிட்டார். இதனை கவனித்த நீதிபதி மனுதாரர் மீது 2013 ஆண்டு முதல் வழக்குகள் உள்ளதால் மனுதாரரின் உண்மைத் தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கருத்து தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
பல வழக்குகளில் தொடர்புள்ளவர் மனுதாரர்
பல வழக்குகளில் மனு தாரருக்கு தொடர்பு உள்ளது என்று ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமரிபிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நோக்கத்தோடு கே.என்.நேருவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு உரிய உத்தரவை பிறப்பிக்கும் என்றும் திமுகவினர் தெரிவித்துள்ளனர்.






















