தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மத்திய அரசும், மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கொரோனா தொற்று இரண்டாவது அலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகம் தாக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அதை வெளிப்படையாக சுகாதாரத்துறை செயலாளர் அறிவிக்கவேண்டும். அது சிறு நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.