எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மாக்களே இப்படி தண்டித்துள்ளன... ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி!

அதிமுக அலுவலகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா தண்டித்துள்ளது என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அதிமுக அலுவலகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுத்துள்ளது என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எம்ஜிஆர், தொண்டர்களுக்கு கொடுத்த சொத்துதான் கட்சித் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள், அதனைக் கோயிலாக கருதுகின்றனர். வணங்கி வருகின்றனர். 

அந்தக் கோயிலை உடைத்து உள்ளே சென்றவர்கள் இறந்துவிட்டனர். ஜெயலலிதாவின் அறையை உடைத்து உள்ளே சென்ற மற்றொருவர் உடைந்து போயுள்ளார். இரு பெரு தலைவர்களின் ஆத்மா தண்டனை கொடுத்திருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுக என்ற அற்புதமான இயக்கத்தை உருவாக்கினர். இப்படி அவர்கள் பெரும் தியாகம் செய்து உருவாக்கிய அதிமுக கழகத்தை ஒரு சிலர் தங்கள் வசம் கொண்டு செல்ல நினைக்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு பிரிவுகளாக இருந்தது. பின்னர் இரண்டு அணிகளும் கடந்த 2017ஆம் ஆண்டு ஒன்றாக இணைந்தது. 

2017இல் அதிமுகவில் ஒன்றிணைக்கப்பட்டு பொதுக்குழு கூட்டப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுக சட்டத்தில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொது உறுப்பினர்கள் அல்லாமல், பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்ய திருத்தம் செய்யப்பட்டது. ஓபிஎஸ்ஸுக்கு பதவி வழங்க வேண்டும் என்பதற்காகவே தான் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

அதன் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. அப்போதுதான் அண்ணன் ஓபிஎஸ் கலந்துக்கொண்ட கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் குரல் கொடுத்தனர். 

தொடர்ந்து ஓபிஎஸ் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், பொதுக்குழு கூடும் முன்னர் ஓபிஎஸ் காவல் துறையினருக்கு கடிதம் எழுதினார்.  மேலும், பொதுக்குழுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளரே நீதிமன்றத்தை நாடினார். நிர்வாகிகள் யாரும் நீதிமன்றத்தை நாடவில்லை. 

அதிமுக சொத்து பத்திரங்களை எல்லாம் ரவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்து சென்றவர் ஓ.பன்னீர்செல்வம். இவரோடு எப்படி நான் ஒத்துப்போறது? ஒவ்வொரு முறையும் ஓபிஎஸ் அநாகரிகமாக நடந்துகொண்டார். என்னை முதல்வர் வேட்பாளராக அனைவரும் ஒத்துக்கொண்டு அறிவிக்க நினைத்தபோது அவர் ஒத்துக்கொள்ள மறுத்து பிரச்னை செய்தார்.

கட்சி விரோத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைய முடியும்? அவருடன் இணைந்து செயல்பட முடியாது. ஓபிஎஸ்ஸுக்கு பதவி வேண்டுமென்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்வார். பதவிக்கு பிரச்னை வரும்போதெல்லாம் சசிகலாவை கையில் எடுத்துக்கொள்வார்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola