திருப்போரூர்: இறால், மீன்கள் அழியும் அபாயம்! சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு, வளர்ச்சிப் பணிகள் முடக்கம்!
திருப்போரூர் அருகே நன்னீரும் கடல்நீரும் சங்கமிக்கும், கழிவேலி பகுதியில் இறால் மற்றும் மீன்கள் அழியும் நிலையில் உள்ளதாக, சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற மகளிர் உரிமை மீட்பு பயணம் பிரச்சாரக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
மாமல்லன் நீர்த்தேக்கம்
திருப்போரூர் பகுதி நன்னீரும் கடல் நீரும் சங்கமிக்கும் ஒரு மிக முக்கியமான உயிர்ச்சூழல் மண்டலம் என்றும், இங்கு கிடைக்கும் இறால் மற்றும் நண்டு வகைகள் தனித்துவமான சத்துக்களைக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார். இப்பகுதிக்கு ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் நிலையில், இங்கு 'மாமல்லன் நீர்த்தேக்கம்' கொண்டு வந்தால் கழுவேலி உள்ளிட்ட இயற்கை வாழிடங்கள் அழிந்துவிடும் என்றும், இது பறவைகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
வளர்ச்சிகள் நடைபெறவில்லை
திருப்போரூரில் ஹெலிகாப்டர் தளத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் சத்தத்தினால் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். அரசு இதுபோன்ற தேவையற்ற திட்டங்களைக் கைவிட்டு, மக்களுக்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, கடந்த ஏழு ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை இன்னும் முழுமைப்படுத்தவில்லை என்றும், சென்னையை ஒட்டிய பகுதி என்று கூறி ரியல் எஸ்டேட் வளர்ச்சியை மட்டுமே இவர்கள் சாதனையாகக் காட்டுகிறார்கள் என்றும் சாடினார்.
வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை
மேலும், 22-கி.மீ தொலைவிற்கு ஒரே ஒரு துணை மின் நிலையம் மட்டுமே இருப்பதால் இப்பகுதியில் முறையான மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்துப் பேசிய சௌமியா அன்புமணி, 10 கிராமங்களைக் காலி செய்து உருவாக்கப்பட்ட 'ஜப்பான் சிட்டி' போன்ற தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்தார். ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்டம் இருப்பதைப் போல, தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திமுக தனது 196-வது தேர்தல் வாக்குறுதியில் இதனைச் சொல்லியிருந்தாலும், இதுவரை அதை நிறைவேற்றவில்லை என்று அவர் விமர்சித்தார். கல்பாக்கம் அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள 7 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுவதையும், 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாகப் பணி வழங்கப்படாததையும் அவர் தனது உரையில் பதிவு செய்தார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு
சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விடப் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்றும் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி வைப்பதற்குப் பதிலாக பொது இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெண் குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது போல, ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்க விதிகளைக் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்களை அறிவுறுத்தினார்.
இறுதியாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்.இ.டி டிவி போன்ற இலவசப் பொருட்களுக்காக வாக்குகளை விற்க வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தவறாக எழுதுவதற்குச் சமம் என்றும் எச்சரித்தார். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்றும், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்குத் துணையாக மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.























